என்னை ஊழல் கட்சி என சொல்லும் விஜயகாந்த், படத்தில் நடிக்க லட்சக்கணக்கில் வாங்குகிற பணத்தில், பெரும் பகுதி வருமான வரி கட்டாமல், கறுப்பு பணமாக வாங்கப்படுவதாகக் கூறப்படுகிறதே, அவர் ஊழலைப் பற்றி பேசியிருப்பது, கேலியாக இருக்கிறது,'' என முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இது குறித்த அவரின் கேள்வி - பதில்:
தி.மு.க., - அ.தி.மு.க., இரண்டுமே ஊழல் கட்சிகள்; அவர்களோடு கூட்டணி கிடையாது என தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கூறியிருக்கிறாரே?
அதை எல்லா ஏடுகளும் வெளியிட்டிருக்கின்றன. ஒரு ஒப்பீட்டு உதாரணத்தை சொன்னால், பொதுமக்களுக்கு விளக்கம் கிடைக்கும். தி.மு.க., தலைவனாக இருக்கும் நான், திரைப்படங்களுக்கு கதை, வசனம் எழுதுவதில் கிடைக்கும் ஊதியம் முழுவதையும், வருமான வரி கட்டியது போக மிச்சத்தை பொது நலன்களுக்கான நிதியாக வழங்குகிறேன். சில நேரம், அரசின் முதல்வர் பொது நிவாரண நிதியிலும் சேர்த்து விடுகிறேன்.உதாரணமாக, சுனாமி நிவாரணத்திற்கு அன்றைய முதல்வர் ஜெயலலிதாவிடம், ஸ்டாலின் மூலம் 21 லட்ச ரூபாயை நேரில் வழங்கச் செய்தேன். என் பெயரில் உள்ள அறக்கட்டளை மூலம், இதுவரை 2,049 பேருக்கு ஒரு கோடியே 72 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. எனது பொற்கிழி அறக்கட்டளை மூலம், 17 பேருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் பொற்கிழி வழங்கியிருக்கிறேன். ஒரு கோடி ரூபாயை தமிழ்ச் செம்மொழி நிறுவனத்திற்கு வழங்கியிருக்கிறேன். எல்லாவற்றிற்கும் மேலாக, என் வீட்டையே மருத்துவமனையாக மாற்றிட வழங்கியிருக்கிறேன். அப்படிப்பட்ட என்னையும் ஊழல் கட்சி என்கிறார்; மற்றொரு கட்சியையும் ஊழல் கட்சி என்கிறார்.இந்த இரண்டு கட்சிகளுடன் கூட்டணி சேர மாட்டேன் என கூறும் நண்பர் விஜயகாந்த், ஒரு படத்திலே கதாநாயகனாக நடிக்க லட்சக்கணக்கில் வாங்குகிற பணத்தில், பெரும் பகுதி வருமான வரி கட்டாமல், கறுப்பு பணமாக வாங்கப்படுவதாகக் கூறப்படுகிறதே, அவர் ஊழலைப் பற்றி இப்படி பேசியிருப்பது, உலகத்தினர் வாய் விட்டு சிரிப்பதற்குரிய கேலியாக அல்லவா இருக்கிறது. பிறர் முகத்தில் குறை காண்பதற்கு முன், தன் முகத்தைக் கண்ணாடியில் பார்த்துக்கொள்ள வேண்டாமா?
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ., மகேந்திரன் விடுத்துள்ள மறுப்பு அறிக்கையைப் பார்த்தீர்களா?அவரது மறுப்பு அறிக்கையை பார்த்தேன். அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ள, விடுதலைப்புலிகள் அமைப்பின் முக்கிய தலைவர் குமரன் பத்மநாபன் அளித்த பேட்டியையும் நாளேடுகளில் படித்தேன். அந்த பேட்டி உண்மையல்ல என மகேந்திரன் எம்.எல்.ஏ., மறுப்பு தெரிவித்திருக்கிறார். இதிலே என்ன உண்மை என்பதை குமரன் பத்மநாபன் தான் தெரிவிக்க வேண்டும்.
ஸ்ரீபெரும்புதூர் கிரீன்பீல்டு விமான நிலையம் உட்பட தமிழகத்தில் வரக்கூடிய நல்ல திட்டங்களை எல்லாம், அரசியல் உள்நோக்கத்தோடு, ஒரு சில கட்சிகள் எதிர்ப்பதால், நாட்டிற்கும், மக்களுக்கும் தானே இழப்பு?
இந்த பிரச்னை பற்றி, "தினமலர்' நாளிதழில், ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்த கணபதி என்பவர், "இது உங்கள் இடம்' பகுதியில் எழுதியுள்ளார். அதில் அவர், சில குறைகளைத் தெரிவித்திருந்த போதும், சில உண்மைகளையும் தெரிவித்துள்ளார். உண்மை பொதுமக்களுக்குத் தெரிகிறது. அது மாத்திரமல்ல, ஏதோ உள்நோக்கத்தோடு தான், எதிர்க்கட்சிகள் எதிர்க்கின்றன என்பதும் பொதுமக்களுக்கு புரிந்துள்ளது.இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment