கம்யூனிஸ்டுகள் வைத்த கொள்ளி தான், இந்தியாவில் சில மாநிலங்களில், "மாவோயிஸ்ட்' தாக்குதல், அராஜகம், உயிர் பலிகள் என்ற அளவுக்கு கொழுந்து விட்டு எரியக் காரணம்' என, முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:தி.மு.க., போராட்டங்களில் ஈடுபட்ட போது விளம்பரப்படுத்திக் கொள்ளவோ, வேண்டுமென்றே அரசுக்கு சிக்கலை ஏற்படுத்த வேண்டும் என்றோ செயல்பட்டதில்லை. எந்த பிரச்னையாக இருந்தாலும், அமைதியான முறையில், அறவழியிலேயே போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.கம்யூனிஸ்டுகள் நடத்துகின்ற கிளர்ச்சி எதுவாயினும், அதற்கு ஒரு போர்க்கள முத்திரை குத்தாமல் இருக்கமாட்டார்கள். முதலில் ஊர்வலம் என்பர், அடுத்து கண்டன ஆர்ப்பாட்டம் என்பர், அதற்கடுத்து மறியல் என்பர், அதைத் தொடர்ந்து தலைமைச் செயலகம் முற்றுகை என்பர். அரசு அதை வேடிக்கை பார்த்து, அவர்களுக்கு முரசு கொட்ட வேண்டுமென எதிர்பார்ப்பர்.இப்படித்தான் கம்யூனிஸ்டுகளின் கிளர்ச்சிகள், கோரிக்கை பேரணிகளாக மாறி, கோட்டை முற்றுகை என்ற அளவிற்கு வளர்ந்துள்ளன. அவர்கள் வைத்த கொள்ளி தான், இந்தியாவில் சில மாநிலங்களில், "மாவோயிஸ்ட்' தாக்குதல், அராஜகம், உயிர் பலிகள் என்ற அளவிற்கு கொழுந்து விட்டு எரிகின்றன.
தமிழகத்திலும் அத்தகைய அராஜகங்களை, வன்முறை சேட்டைகளை, கொலை வெறி தாக்குதல்களை கட்டவிழ்த்து விட வேண்டுமென்று திட்டமிடுகின்றனர். தி.மு.க., அரசுக்கு ஒரு சிறு களங்கமாவது ஏற்படுத்தினால் தான், அதை வைத்து தேர்தலில் நிற்கவோ, தங்கள் கூட்டணித் தலைவி, "சிறுதாவூர் சீமாட்டி' வெற்றி வாகை சூடி மீண்டும் கோலோச்சவோ முடியும் என்ற எதிர்பார்ப்போடு திட்டங்களை தீட்டுகின்றனர்.அவர்கள் அறிக்கையில், 27 ஆண்டுகளாக தொகுப்பூதியத்தின் கீழ் பணியாற்றும் சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது தான் அவர்களின் கோரிக்கை. 27 ஆண்டுகளாக எந்த அரசாவது முன் வந்ததா? ஏன், மேற்கு வங்கம், கேரளாவில் உள்ள கம்யூனிஸ்ட் அரசுகள் முன் வந்ததுண்டா? ஆனால், தமிழகத்தில் மட்டும் பணி நிரந்தரம் கோரி போராட்டம் நடத்துவோம் என்பதும், அதற்கு கோட்டையை முற்றுகையிடுவோம் என்பதும், அதை போலீசார் தடுத்தால், தமிழக அரசின் உச்ச கட்ட அராஜகம் என்றும் சொல்வது எந்த வகை ஜனநாயகம் என்பது தெரியவில்லை.
சத்துணவு ஊழியர்களை, முழு நேர அரசு ஊழியர்களாக ஆக்க இயலாவிட்டாலும், அ.தி.மு.க., அரசு அளிக்காத சலுகைகளை எல்லாம் இந்த ஆட்சியில் அளித்திருக்கிறோம். இதற்காக சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் எனக்கு நன்றி அறிவிப்பு பாராட்டு விழாவையே நடத்தியிருக்கின்றனர்.சத்துணவு பணியாளர்களுக்கு இந்த அரசின் மீது எவ்வித குறையும் இல்லை. அவர்கள் மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர். ஆனால், அவர்களை வைத்துக் கொண்டு ஒரு சில சங்கத்தினர், சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்வதாகவும், கோவில்களை பார்த்து வரலாம் என்றும் ஏமாற்றி சென்னைக்கு அழைத்து வர முற்படுகின்றனர்.மற்ற அலுவலர் சங்கத்தினர், என்னையோ, அமைச்சர்களையோ அணுகி தங்கள் கோரிக்கைகளை தெரிவித்து, சலுகைகளை பெறுகின்றனர்.இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment