"நக்சலைட்கள் வன்முறையை கைவிட்டு, பேச்சுவார்த்தையில் பங்கேற்க வேண்டும். வளர்ச்சியில் மிகவும் பின்தங்கிய பகுதிகளில் சமூக, பொருளாதார திட்டங்களை நிறைவேற்ற, மாநில அரசுகளுக்கு அவர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்' என, பிரதமர் மன்மோகன் சிங் பேசினார்.
தலைநகர் டில்லியில் சுதந்திர தின விழா நேற்று கோலாகலமாக நடந்தது. செங்கோட்டையில் நடந்த விழாவில் பிரதமர் மன்மோகன் சிங், தேசியக் கொடியேற்றி வைத்தார்.விழாவில் அவர் பேசியதாவது:நக்சலைட்கள், உள்நாட்டு பாதுகாப்புக்கு பெரும் சவாலாக உள்ளனர். எந்தவொரு பிரச்னைக்குமே வன்முறை தீர்வு அல்ல. வன்முறையில் ஈடுபடுவோர், உறுதியான கரம் கொண்டு ஒடுக்கப்படுவர். நக்சலைட்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட அரசு நடவடிக்கை எடுக்கும்.வளர்ச்சியில் மிகவும் பின்தங்கிய பகுதிகளில், குறிப்பாக, பழங்குடி மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் போதிய திட்டங்களை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கான திட்டங்களை தீட்டும்படி, திட்டக் கமிஷனுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்த விஷயத்தில் மாநில அரசுகளுக்கு தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் மத்திய அரசு வழங்கும். மாநில அரசுகள், மத்திய அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும்.
நக்சலைட்கள் வன்முறையை கைவிட்டு, பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும். வளர்ச்சி குறைந்த பகுதிகளில், சமூக மற்றும் பொருளாதார திட்டங்களை நிறைவேற்றுவதற்கு, அரசுக்கு நக்சலைட்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்.காஷ்மீரில் நடக்கும் வன்முறை சம்பவங்கள் கவலை அளிக்கின்றன. இந்த வன்முறையால் யாருக்கும் எந்த பயனும் இல்லை. காஷ்மீர் இந்தியாவின் ஒரு அங்கம் என்ற கோட்பாட்டுக்கு உட்பட்டு, பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண அரசு தயாராக உள்ளது. வன்முறையை கைவிடும் யாருடனும் பேச்சு நடத்த தயார்.
பாகிஸ்தானுடனான அனைத்து பிரச்னைகளுக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண தயாராக உள்ளோம். அதே நேரத்தில், பயங்கரவாதம் கைவிடப்பட வேண்டும். நிலையான, ஒருங்கிணைந்த பாகிஸ்தானைத் தான் இந்தியா விரும்புகிறது. அதே நேரத்தில் அந்த நாடு, பயங்கரவாதத்தை விட்டு விலகி இருக்க வேண்டும்.நம் நாட்டின் ஜனநாயகத்தின் முக்கிய தூணாக விளங்குவது மதச்சார்பின்மை. அதை தக்க வைத்துக் கொள்ளும் நடவடிக்கைளில் அரசு உறுதியாக உள்ளது. சிறுபான்மையினரின் நலனை அரசு கவனத்தில் கொண்டுள்ளது. சிறுபான்மையினர் நலனுக்காக கடந்த நான்காண்டுகளாக பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. மதம், மாநிலம், இனம், மொழி என்ற பெயரில் சமூகத்தில் பிரிவினை தலைதூக்குவது கவலை அளிக்கிறது. தூய்மையான இந்தியா என்ற பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.ஆரோக்கியமான உணவு, உடல் நலன் ஆகியவை மிகவும் அவசியமானவை. ஆனால், நம் நாட்டு மக்களுக்கு போதிய அளவில் சுகாதார வசதிகள் இல்லை. கிராமங்களை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். உயர் கல்வி, சுகாதாரம் ஆகியவற்றுக்காக இரண்டு தனித் தனி கவுன்சில்கள் அமைக்கப்படும்.டில்லியில் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடக்கவுள்ளது, இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் விஷயம். இந்த போட்டிகள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்படும். காமன்வெல்த் போட்டிகளை தேசிய திருவிழாவாக மக்கள் கொண்டாட வேண்டும்.இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் பேசினார்.
பாதுகாப்பு: சுதந்திர தின விழாவில் நேற்று கொடியேற்றியதன் மூலம், செங்கோட்டையில் ஏழு முறை தேசியக் கொடியை ஏற்றிய பிரதமர் என்ற பெருமை மன்மோகன் சிங்கிற்கு கிடைத்தது. இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு 17 முறையும், அவரது மகளும், முன்னாள் பிரதமருமான இந்திரா 16 முறையும் தேசியக் கொடியை ஏற்றி வைத்துள்ளனர்.சுதந்திர தின விழாவையொட்டி, டில்லியில் நேற்று பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. முக்கிய இடங்களில் ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டிருந்தன. விழா நடந்து முடியும் வரை, அந்த பகுதியில் விமானங்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டிருந்தது.சுதந்திர தின விழாவையொட்டி, ராணுவத்தினரின் மிடுக்கான அணிவகுப்பு, மாணவர்களின் கலை நிகழ்ச்சி ஆகியவையும் நடந்தன.
No comments:
Post a Comment