"தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டும். இவ்விஷயத்தில் மத்திய அரசு வேடிக்கை பார்க்காமல் உருப்படியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கச்சத்தீவை மீட்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ள வேண்டும்' என, பார்லிமென்டில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் பிரச்னை குறித்து ராஜ்யசபாவில் கவன ஈர்ப்பு தீர்மான விவாதத்தில் தமிழக எம்.பி.,க்கள் பேசியதாவது:
மைத்ரேயன்: சம்பிரதாயமாக உள்ள இந்த அறிக்கை ஏமாற்றம் அளிக்கிறது. தங்களை காப்பாற்ற, மத்திய அரசு வராதா என, தமிழக மீனவர்களின் நம்பிக்கை பொய்த்து போகிறது. 24 மாதங்களில், 22 தாக்குதல்கள் நடந்துள்ளன. வெறுமனே கடிதம் மட்டும் எழுதுகிறீர்களே என கேட்டால், படையா அனுப்ப முடியும் என்கின்றனர். கடலில் நீரோட்டம் மாறும்போது மீனவர்களின் பாதையும் மாறும். இதை எல்லை தாண்டுவதாக கூறக் கூடாது. கச்சத்தீவை மீட்க வேண்டும். அதுதான் மீனவர்கள் பிரச்னைக்கு ஒரே தீர்வு.
ராஜா: எப்போது விவாதம் நடந்தாலும் ஒரே மாதிரியான அறிக்கையை மத்திய அரசு தருகிறது. சார்க் அமைப்பில் இந்தியாவும் உள்ளது; இலங்கையும் உள்ளது. அந்த அமைப்பில் மீனவர்கள் தாக்கப்படும் பிரச்னை குறித்து இலங்கையிடம் இந்தியா எழுப்ப வேண்டும். இரு நாடுகளுக்கும் இடையில் பொதுவான அமைதி கடற்பரப்பை ஏற்படுத்த வேண்டும். அங்கு தாக்குதல் எதுவும் இருக்கக் கூடாது என்ற நிலையை உருவாக்க வேண்டும். கச்சத்தீவு ஒப்பந்தத்தில் தமிழக மீனவர்களுக்கு மீன்பிடி உரிமை அளிக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய அந்த உரிமை ஏன் மறுக்கப்படுகிறது. இந்த உரிமை கைவிடப்படுவதை இந்தியா ஏற்கிறதா? இந்த ஒப்பந்தத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும். இலங்கை குறித்த வெளியுறவுக் கொள்கை மாற வேண்டும்.
கனிமொழி: குழம்பிய குட்டையில் மீன்பிடிப்பது போல, மீனவர்கள் பிரச்னையிலும்கூட சிலர் அரசியல் லாபம் பார்க்க ஆசைப்படுகின்றனர். தமிழக அரசை இதில் குறைகூற முடியாது. இலங்கையுடனான பிரச்னையை மத்திய அரசு தான் கையாள முடியும். மத்திய அரசு மேற்கொள்ளும் முடிவுகளையும் நடவடிக்கைகளையும் தான் ஏற்க வேண்டிய சூழல் உள்ளது. மீனவர்கள் தாக்குதலுக்காக ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தம் முதலில் நம்பிக்கையை ஏற்படுத்தியது. ஆனால் போகபோக நம்பிக்கை இழக்கும்படி ஆகிவிட்டது. தமிழக மீனவர்கள் தாக்கப்படுகின்றனர் என பல முறை கூறியும் இலங்கை திரும்ப திரும்ப அதை மறுக்கிறது. மத்திய அரசிடம் சேட்டிலைட் உட்பட எத்தனையோ நவீன தொழில்நுட்ப வசதிகள் உள்ளன. அவற்றை வைத்து நடுக்கடலில் யார் குற்றம் செய்கின்றனர் என்பதை கண்டுபிடிக்க முடியாதா?
வெங்கையா நாயுடு: ஒப்புக்காக தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை இது. இலங்கையின் போக்கில் மாற்றம் இல்லை என தமிழக முதல்வரே கடிதத்தில் கூறுகிறார். பிறகு எப்படி மத்திய அரசு மறுக்கிறது? இது அரசியல் பிரச்னை அல்ல. மீனவர்கள் பிரச்னை. கச்சத்தீவை மீட்பது வேறு விஷயும். அதற்காக அப்பகுதியில் மீன்பிடிக்கக் கூடாதா? இந்திய கடல் எல்லைக்குள்ளேயே மீனவர்கள் தாக்கப்படுவதற்கு மத்திய அரசின் பதில் என்ன? தமிழகத்தில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்ட பிறகுதான் இவ்விஷயத்தில் மத்திய அரசு தீவிரமாக கவனம் செலுத்துமா?
சுதர்சன நாச்சியப்பன்: இரு நாட்டு மீனவர்களும் ஒரே நேரத்தில் மீன்பிடிக்கச் செல்வதாலேயே பிரச்னை. இலங்கை மக்கள் விரும்பும் லூனா மீன்கள், இந்திய கடல்பகுதியில் நிறைய உள்ளன. இந்தியர் விரும்பும் இறால் மீன்கள் இலங்கை கடல் பகுதியில் அதிகம் உள்ளன. எனவே, இருதரப்பு மீனவர்களுக்கும் இடையில் கூட்டு அமைப்பு ஏற்படுத்த வேண்டும். தலைமன்னார் - ராமேஸ்வரம் இடையில் படகு போக்குவரத்து விட வேண்டும். கொழும்பு - தூத்துக்குடி இடையில் கப்பல் போக்குவரத்து துவங்க வேண்டும். இருநாட்டு வர்த்தக தொடர்புகளை அதிகரிக்க வேண்டும். இந்திய மீனவர்களுக்கு அடையாள அட்டையும், இன்சூரன்ஸ் திட்டமும் அளிக்க வேண்டும்.
திருச்சி சிவா: தமிழர்கள் என்றாலே இலங்கைக்கு பிடிக்காது. தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை இந்திய ராணுவம் வேடிக்கை பார்க்கக் கூடாது. தமிழக முதல்வர் தொடர்ந்து கடிதம் எழுதியும் தாக்குதல்கள் தொடர்கின்றன. சர்வதேச கடல் எல்லை கோடு இருநாட்டையும் பிரிக்கிறதா அல்லது தமிழக மீனவர்களின் உயிர்களை பறிக்கிறதா? இலங்கையுடன் எத்தனையோ ஒப்பந்தங்களை இந்தியா போட்டு வரும்போது மீனவர்கள் பிரச்னை குறித்து பேசி தீர்வு காணக் கூடாதா?
ஜெயந்தி நடராஜன்: தமிழகத்தின் பிரச்னை இல்லை இது. இந்தியாவின் பிரச்னை. நிறைய தடவை இந்த அவையில் விவாதிக்கப்பட்டும் தீர்வு வரவில்லை. பிரதமர் நிறைய நடவடிக்கைகள் எடுத்தும் பிரச்னை தீரவில்லை. கடல் எல்லைக்கோடு ஒன்றும் இறுதியானது அல்ல. இவ்விஷயத்தில் வெறும் பார்வையாளராக வேடிக்கை பார்க்கக் கூடாது. வான் வழி உட்பட அனைத்து வழிகளிலும் கண்காணிக்க வேண்டும். கொள்கைகள் இவ்விஷயத்தில் முக்கியமல்ல. மனித உயிர்கள் பலியாகக் கூடாது. இவ்வாறு எம்.பி.,க்கள் பேசினர்.
இரண்டு முறை சபை ஒத்திவைப்பு: தமிழக மீனவர்கள் தாக்கப்படும் சம்பவம் குறித்து நேற்று ராஜ்யசபாவில் நடந்த கவனஈர்ப்பு தீர்மானத்தின் மீது, தமிழக எம்.பி.,க்கள் ஒவ்வொருவராக பேச அழைக்கப்பட்டனர். முதலில் மைத்ரேயன் பேசியபோது தி.மு.க., எம்.பி.,க்களின் குறுக்கீடு பலமாக இருந்தது. திருச்சி சிவா, செல்வகணபதி போன்றவர்கள், "பாயின்ட் ஆப் ஆர்டர்' கிளப்பவே, பெரும் ரகளை ஆனது. ஒருகட்டத்தில் கனிமொழிக்கும், மைத்ரேயனுக்கும் வாக்குவாதம் முற்றியது. தன்னை பார்த்து மைத்ரேயன் பேசுவதாக கனிமொழி கூற, அவைத் தலைவரை பார்த்துதான் பேச வேண்டுமென மைத்ரேயன் அறிவுறுத்தப்பட்டார். மீனவர்கள் தாக்கப்படும் பிரச்னையை விட்டுவிட்டு சம்பந்தமில்லாமல் பேசுவதாக தி.மு.க., எம்.பி.,க்கள் குற்றம் சாட்ட, அதை மறுத்தார் மைத்ரேயன். மீனவர்கள் பிரச்னையை ஒட்டிதான் தான் பேசுவதாகவும், தன்னை பேச விடாது குறுக்கிடுவதாகவும் மைத்ரேயன் கூறினார். அனைவரையும் அமைதி காக்கும்படி துணைத் தலைவர் ரகுமான்கான் கேட்டுக் கொண்டே இருந்தார்.
ரகுமான்கானுக்கும், மைத்ரேயனுக்கும் வாக்குவாதம் முற்றியது. "என்னை பேச விடாது தடுக்கும் தி.மு.க., எம்.பி.,க்களை அமரச் சொன்னால்தான் நான் பேசுவேன். இல்லையேல் நான் தொடர்ந்து பேசப் போவதில்லை' என, இருக்கையில் அமரவே, சபையில் கூச்சல் குழப்பமும் அதிகரித்தது. கவனஈர்ப்பு தீர்மான விவாத நேரம் நீட்டிக்கப்படாது என்றார் ரகுமான்கான். தொடர்ந்து தி.மு.க.,வும், அ.தி.மு.க., வும் வாக்குவாதத்தில் ஈடுபட்டன. இதனால் சபை, 10 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் சபை கூடியபோதும், மீண்டும் இன்னொரு முறை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் மீண்டும் சபை கூடிய போது, உணர்ச்சிவசப்பட்டு விட்டதாகக் கூறி, சபைத் தலைவரிடம் மைத்ரேயன் மன்னிப்பு கேட்டுவிட்டு, தொடர்ந்து பேசி முடித்தார்.
No comments:
Post a Comment