அடுத்த ஆண்டு நடக்கவுள்ள சட்டசபை தேர்தலை ஒட்டி, அரசியல் கட்சிகள் மத்தியில் அணி மாற்றம் வருமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணியில் உரசல் எதுவும் இல்லை. கூட்டணி நீடிக்கிறது என்றும், கூட்டணி குறித்த கருத்துக்களை யாரும் வெளியே பேசக்கூடாது என, தமிழக காங்கிரஸ் கட்சி திடீரென தடை விதித்துள்ளது.
கோவையில் நடந்த அ.தி.மு.க., கண்டன பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா பேசும் போது, "நீங்கள் விரும்பும் கூட்டணி அமையும்' என அறிவித்தார். அவரது சூசகமான பேச்சுஅ.தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணியை உருவாக்கும் என, அ.தி.மு.க., தொண்டர்கள் நம்புகின்றனர். காங்கிரஸ் கட்சியை அ.தி.மு.க.,வினர் விமர்சிக்கக் கூடாது என, ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.டில்லியில் அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலர் ராகுலை, தமிழக காங்கிரஸ் பிரமுகர்கள் சிலர் சந்தித்து பேசும் போது, "அ.தி.மு.க., - காங்கிரஸ் இயற்கையான கூட்டணி' என, தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், கக்கனின் நூற்றாண்டு விழா மதுரையில் நேற்று முன்தினம் நடந்தது. இவ்விழாவில், காங்கிரஸ் எம்.பி., ஒருவர் பேசும் போது, "தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது' என்றார். அப்போது அங்கு கூடியிருந்த தொண்டர்கள் ஆட்சேபனை தெரிவிக்கும் வகையில் கோஷம் எழுப்பினர். அடுத்து பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவர், "கூட்டணி தொடர்பாக தொண்டர்களின் உணர்வை மேலிடத்தில் தலைவர்கள் தெரிவிக்க வேண்டும்' என, தடாலடியாக பேசினார். அவரது பேச்சு, தி.மு.க., வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே கூட்டத்தில் கலந்து கொண்ட உள்துறை அமைச்சர் சிதம்பரம் நேற்று காலை அவசரமாக முதல்வரை சந்தித்து பேசினார்.
இந்நிலையில், சத்தியமூர்த்தி பவனில் தங்கபாலு நிருபர்களுக்கு அளித்த பேட்டி:ஆதிதிராவிட மக்களின் முன்னேற்றத்திற்காக காங்கிரஸ் கட்சி பாடுபட்டு வருகிறது. மதுரையில் கக்கனின் நூற்றாண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. காங்கிரஸ் கட்சியில் செல்வப்பெருந்தகை இணைந்ததை வரவேற்கிறோம். கூட்டணி பற்றி முடிவு எடுக்கும் அதிகாரம் சோனியாவுக்கு மட்டுமே உண்டு. அவர் இடுகிற கட்டளையை நாங்கள் நிறைவேற்றுவோம்.டில்லியில், கூட்டணி தொடர்பாக அ.தி.மு.க., எம்.பி.,க்கள், காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து பேசியது பற்றி எனக்கு தெரியாது.
கோவையில் அ.தி.மு.க., நடத்திய ஆர்ப்பாட்டத்தில் ஜெயலலிதா, கூட்டணி குறித்து பேசியது அவரது கட்சியின் நிலைப்பாடு. ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு விருப்பம் இருக்கும்.காங்கிரஸ் - தி.மு.க., கூட்டணியில் எந்த பிரச்னையும் இல்லை. எந்த குறுக்கீடும் இல்லை. காங்கிரஸ் நண்பர்கள் உள்அரங்கில் பேசும் விஷயங்களை பொதுமேடையில் பேசக்கூடாது. தங்களது கருத்துக்களை மாவட்ட தலைவர்கள் கூட்டம், செயற்குழுக் கூட்டத்தில் தான் பேச வேண்டும். இதை அறிவுரையாக சொல்ல கடமைப்பட்டுள்ளேன். நடவடிக்கை எடுப்பதெல்லாம் உட்கட்சி விவகாரம்.கட்சி தேர்தல் அனைத்து மாவட்டங்களில் உள்ள கிளைகளில் நடக்கும். அடுத்த கட்ட தேர்தல் அட்டவணை அறிவிக்கப்படும்.இவ்வாறு தங்கபாலு தெரிவித்தார்.
மேலும், தலித்துக்கள் ஆதரவு முழுமையாக காங்கிரசுக்கு இருக்கும் பட்சத்தில் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியைப் பெற வாய்ப்பு அதிகம் என்ற கருத்தும் பேசப்படுகிறது. தேர்தல் வரும் நேரம் நெருங்கியதால், காங்கிரஸ் கட்சியில் உள்ள பலரும் தங்கள் விருப்பங்களை அவ்வப்போது தெரிவிக்க முன்வந்திருப்பது, கட்சித் தலைமைக்கு சிக்கலை ஏற்படுத்த ஆரம்பித்திருக்கிறது.
No comments:
Post a Comment