கூட்டணி குறித்து நான் மட்டும்தான் பேச வேண்டும். வேறு யாருக்கும் அந்த அதிகாரம் கிடையாது. எனவே காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கட்டுப்பாடுடன் செயல்பட வேண்டும். உள்கட்சியில் பேச வேண்டிய விஷயங்களை உள்கட்சியிலும், வெளியில் பேச வேண்டியதை மேடைகளிலும் பேச வேண்டும். இதையும் மீறி பேசுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று டென்ஷனாக கூறியுள்ளார் தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு.
தலைவர் பேச்சைக் கேட்காமல் தன்னிச்சையாக பேசித் திரியும் கட்சி காங்கிரஸ் மட்டும்தான். இங்குதான், மாநிலத் தலைவரின் பேச்சை அவரது ஆதரவாளர்களைத் தவிர வேறு யாரும் மதிக்க மாட்டார்கள்.
சமீப காலமாக தி்முகவை சரமாரியாக விமர்சித்துப் பேசி வருகிறார் மூத்த தலைவரான ஈவிகேஎஸ் இளங்கோவன் . அவருக்கு ஒத்து ஊதுவது போல தானும் விமர்சித்துப் பேசி வருகிறார் கார்த்தி சிதம்பரம் . இதனால் திமுக தரப்பு கடும் டென்ஷனாக உள்ளது.
இதனால் தங்கபாலுவுக்கு தர்மசங்கடமாகியுள்ளது. இந்த நிலையில் கோவை வந்த அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தமிழகத்தில் காங்கிரஸ்-திமுக கூட்டணி வலுவாக உள்ளது. அகில இந்திய காங்கிரஸ் தலைமை, தமிழக தலைமை மற்றும் திமுக தலைமை இடையே எவ்வித உரசலும் இல்லை. காங்கிரஸ்-திமுக உறவில் யாரும் குறுக்கே வர முடியாது.
அகில இந்திய தலைமை எடுக்கும் முடிவுக்கு காங்கிரஸ் தொண்டர்கள் கட்டுப்படுவார்கள். கூட்டணி பற்றி தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் என்ற முறையில் இதுவரை நான் விமர்சித்துப் பேசவில்லை. மற்றவர்கள் விமர்சித்துப் பேசுவது முறையல்ல. திமுகவை பற்றி தனிப்பட்ட முறையில் யாரும் விமர்சனம் செய்யக்கூடாது.
காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கட்டுப்பாடுடன் செயல்பட வேண்டும். உள்கட்சியில் பேச வேண்டிய விஷயங்களை உள்கட்சியிலும், வெளியில் பேச வேண்டியதை மேடைகளிலும் பேச வேண்டும். இதையும் மீறி பேசுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ளது. எனவே, தேர்தல் கூட்டணி பற்றி இப்போது பேச வேண்டிய அவசியம் இல்லை. கட்சியை பலப்படுத்துவதை பற்றி சிந்திக்க வேண்டிய நேரம் இது. காங்கிரஸ் கட்சியின் கருத்துக்களை தெரிவிக்க தமிழ்நாடு தலைவர் என்ற முறையில் எனக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. மற்றவர்கள் கருத்து அதிகாரபூர்வமானது அல்ல.
அதிமுக, திமுக கட்சியின் ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டங்களுக்கு கூட்டம் கூடுவது இயல்பான விஷயம். அது பற்றி காங்கிரஸ் கட்சி கவலைப்பட வேண்டியது இல்லை. காங்கிரஸ் கட்சியில் புதிதாக 14 லட்சம் இளைஞர்கள் உறுப்பினர்களாகச் சேர்ந்துள்ளனர்.
வரும் தேர்தலில் மகளிர்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடும், தாழ்த்தப்பட்டவர்களுக்கு 15 சதவீத இடஒதுக்கீடும் காங்கிரஸ் கட்சியில் வழங்கப்படும். இளைஞர்களுக்கும் உரிய பிரதிநித்துவம் வழங்கப்படும்.
மத்திய அரசின் சாதனைகள், திட்டங்களை மக்களிடம் பிரசாரம் செய்து காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தி வருகிறோம். சென்னையில் டிசம்பர் மாதத்தில் சோனியா காந்தி பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது என்றார்.
No comments:
Post a Comment