ஜெகன் மோகன் ரெட்டியால், சட்டசபையில் காங்கிரஸ் பெரும்பான்மை இழக்கும் பட்சத்தில், பிரஜா ராஜ்யம் கட்சி (பி.ஆர்.பி.,) காங்கிரசை ஆதரிக்கும் என, அக்கட்சித் தலைவர் சிரஞ்சீவி அறிவித்துள்ளார். இதன் மூலம், காங்கிரஸ் ஆட்சி ஜெகனை நம்பி இல்லை என, அவருக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் காங்கிரஸ் தலைமை தெரியப்படுத்தியுள்ளது.
ஒய்.எஸ்.ஆர்., மறைந்த பின், மாநில முதல்வராக வருவதற்கு ஜெகன் பிரம்மப் பிரயத்தனம் எடுத்தார். அதேநேரம் கட்சித் தலைமைக்கு கட்டுப்படுவதாகவும் காண்பித்துக் கொண்டார். தலைமை பலதடவை எச்சரித்தும், ஆறுதல் யாத்திரையைத் தொடர்ந்து நடத்தினார். அதன் மூலம் மக்கள் மத்தியில் தனக்கு செல்வாக்கு இருப்பதாக காட்டிக் கொண்டார். காக்கிநாடாவில் சமீபத்தில் அவர் நடத்திய பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் 27 எம்.எல்.ஏ.,க்கள் கலந்து கொண்டது, தலைமையின் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது. அதனால், ஜெகன் ஒருவேளை கட்சியை விட்டு வெளியேறும் பட்சத்தில், சட்டசபையில் ஆட்சியின் பெரும்பான்மை குறைந்து விடும் நிலை ஏற்படும். இதனால் அதை சமாளிக்க, பி.ஆர்.பி.,யைப் பயன்படுத்த தலைமை முடிவு செய்தது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன், சோனியாவைச் சந்தித்த சிரஞ்சீவி, ராஜ்யசபா தேர்தலில் காங்கிரசுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்தார்.
அதற்கடுத்து நேற்று, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், "பிரச்னைகள் எந்தக் காரணத்தால் வந்தாலும், நாங்கள் காங்கிரசை ஆதரித்து, ஆட்சி தொடர வழிவகுப்போம். இப்போதைய நிலையில் மக்கள் இன்னொரு தேர்தல் எனும் பெரும்சுமையைச் சந்திப்பதை நாங்கள் விரும்பவில்லை' என்றார். தற்போது, ஆந்திர சட்டசபையில், மொத்தமுள்ள 294 உறுப்பினர்களில் காங்கிரசுக்கு பெரும்பான்மையாக 156 உறுப்பினர்கள் உள்ளனர். சிரஞ்சீவிக்கு 16 உறுப்பினர்கள் உள்ளனர். அதனால் சிரஞ்சீவியின் ஆதரவு காங்கிரசுக்குப் பேருதவியாக அமையும். அதோடு, ஏழு உறுப்பினர்களைக் கொண்ட மஜ்லிஸ் கட்சி மற்றும் வேறு சில சுயேச்சைகளின் ஆதரவும் கிட்டும் என, காங்கிரஸ் கணக்குப் போட்டு வருகிறது.
சிரஞ்சீவியைக் கைக்குள் போட்டுக் கொள்வதன் மூலம், அவர் ஒரு திரைப்பட நட்சத்திரம் என்ற கவர்ச்சியால் ஒய்.எஸ்.ஆர்., மறைவால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்பவும், ஜெகனை அதன் மூலம் சமாளிக்கவும் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக சிரஞ்சீவி மூலம் அவரது ஜாதி ஓட்டுகளை அப்படியே தன்பக்கம் ஈர்க்கலாம் என கருதுகிறது. காங்கிரசுடன் சேர்ந்திருப்பதால் தன் கட்சிக்கு தார்மீக பலம் கிடைக்கும் எனவும், அதன் மூலம் கட்சிக்கு ஒளிமயமான எதிர்காலம் இருக்கிறது எனவும் சிரஞ்சீவி நம்புகிறார்.
No comments:
Post a Comment