திமுக மீதான ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் கோபம் நியாயமானதே, நாங்கள் அவருக்கு ஆதரவாக இருப்போம் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஆர்.எம். பழனிச்சாமி கூறியுள்ளார்.
சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய மூத்த காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், திருச்செந்தூரில் மு.க.அழகிரி கலந்துகொண்ட ஒரு கூட்டத்திலே திமுகவின் முக்கியத் தலைவர் ஒருவர் ராஜீவ் காந்தியையும், ராகுல் காந்தியையும் மிகவும் தரக்குறைவாக பேசியுள்ளார்.
எங்களுடைய எம்எல்ஏக்களின் ஆதரவிலே ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் திமுகவின் கூட்டத்தில் ராஜீவ் காந்தியையும், ராகுல் காந்தியையும் எவ்வளவு கொச்சையாக பேச முடியுமோ அவ்வளவு கொச்சையாக அந்த கூட்டத்திலே பேசப்பட்டுள்ளது.
இதை கலைஞர் கேட்டாரா ஏன் என்று?. நான் நேரம் வரும் என்று காத்துக் கொண்டிருக்கிறேன். அந்தப் பேச்சின் குறுந்தகடு இன்று தான் என் கைக்கு வந்து சேர்ந்தது. அதை போட்டுக் காண்பித்தால் காங்கிரஸ் தொண்டர்கள் கொதித்து போய்விடுவார்கள். அவ்வளவு கேவலமாக ராஜீவ் காந்தியையும், ராகுல் காந்தியையும், ஜெயலலிதாவையும் பற்றி பேசப்பட்டிருக்கிறது என்றார்.
இந் நிலையில் ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் 'வெள்ளையனே வெளியேறு இயக்க' நினைவு தின விழா கொண்டாடப்பட்டது.
இதில் பேசிய காங்கிரஸ் எம்எல்ஏ பழனிச்சாமி, இந்திய மக்கள் சுதந்திரத்துக்காக போராடி, இன்றும் மக்களுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் கட்சி காங்கிரஸ் தான்.
இந்தக் கட்சியின் தலைவராக இருக்கும் சோனியா காந்தியையும், அவருடைய மகனும் வருங்கால இந்தியாவின் நம்பிக்கைக்குரியவருமான இளம் தலைவர் ராகுல் காந்தியையும், காங்கிரஸ் பேரியக்கத்தை வழி நடத்திச் சென்று மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தியையும், எங்கள் உயிராக இருக்கும் காங்கிரஸ் கட்சியையும் யார் ஒருவர் தரக்குறைவாக பேசினாலும் தாங்கிக் கொள்ள முடியாது.
தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டனின் உணர்வையும், அதன் வெளிப்பாட்டையும்தான் எங்கள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெளிப்படுத்தி வருகிறார்.
தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு காங்கிரஸ்காரரும், தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பின்னால் நாங்கள் இருக்கிறோம் என்று ஒட்டுமொத்த ஆதரவு தெரிவித்துள்ளார்கள்.
பாரதத்தின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பரந்த மனப்பான்மை அவருடைய உயரிய சிந்தனைகளும் எப்படி இன்று அவருடைய பேரனான, நம் இளம் தலைவர் ராகுல் காந்திக்குள் இருக்கிறதோ... அதுபோல மனதில் பட்டதை வெளிப்படையாக பேசும் குணம், தந்தை பெரியாரிடம் இருந்து அவருடைய வாரிசு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு வந்திருக்கிறது.
எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும் ஆட்சியை பிடிப்பதுதான் அந்த கட்சியின் லட்சியம். காங்கிரசும் ஆட்சியை பிடிப்பதற்காகவே அரசியல் நடத்துகிறது. அடுத்த 5வது ஆண்டு தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி என்பதுதான் நமது கோஷம் என்றார்.
No comments:
Post a Comment