""பெண்ணாகரம் பார்முலாவைப் போல் இனி விஞ்ஞானப் பூர்வமாக அரசியல் பணியாற்றுவோம்,'' என, முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி பேசினார்.
விழுப்புரத்தில் நடந்த பா.ம.க., மாவட்ட பொதுக்குழுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது: காசு கொடுப்பதால் கட்சி மாறுபவர்களை தடுக்க வேண்டும். இனி இப்படித்தான் செயல்பட வேண்டும் என திட்டம் வகுத்துள்ளோம், விஞ்ஞானப் பூர்வமான அரசியல் பணியாற்றப் போகிறோம். கல்வி, சமூக நீதி, மொழி, இளைஞர் ஒருங்கிணைப்பு என முதன்மை கொள்கையுடன் நமது கட்சி செயல்படுகிறது. அனைத்து தரப்பு பிரச்னைகளுக்கும் ராமதாஸ் குரல் கொடுத்து வருகிறார். அனைத்து சமூகத்தினரின் ஆதரவினையும் பெற வேண்டும். சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தபோது 5,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி திட்டம் செயல்படுத்தியுள்ளேன். அதில் நாம் பயன்படுத்தி வரும் ஜிப்மரில் 1,000 கோடி ரூபாய் ஒதுக்கி உலகத் தரத்திலான மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது.
இந்த 108 ஆம்புலன்ஸ் இந்தியா முழுவதும் நான் கொண்டு வந்த திட்டம், அமெரிக்க- இந்திய மருத்துவக் குழு ஆராய்ந்து ஓராண்டு முயற்சியில் 950 கோடி ரூபாய் நிதியில் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழகம் உள்ளிட்ட 16 மாநிலங்களில் செயல்படுத்தப்படுகிறது. சிலர் தாங்கள் கொண்டு வந்ததாக சொல்லிக் கொள்கின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் தான் அதிகளவில் குடிசை வீடுகள் உள்ளன. தி.மு.க., - அ.தி.மு.க., கட்சிகள் ஆண்டதால் என்ன பயன். 40 சதவீதம் வன்னியர், 30 சதவீதம் தாழ்த்தப்பட்டவர்கள் குடிசையில் உள்ளனர். இதற்கு போராடினால் ஜாதிக் கட்சி என்கின்றனர். அனைத்து சமூகத்தினரும் சமமாக முன்னேறினால் தான் சமூக நீதி. ஜாதிக் கணக்கெடுப்பை நடத்தச் சொன்னால் செலவிட கருணாநிதி பணம் இல்லை என்கிறார். சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டும் இவர்கள் தாமதப்படுத்துகின்றனர். வி.ஏ.ஓ.,க்களே இந்த கணக்கை கொடுத்து விடுவர். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு, கருணாநிதியிடம் மனம் இருக்கிறது.
நமது கட்சியில் கோஷ்டியில்லை, உழைப்பவர்களுக்கு முன்னுரிமை. ஏழு தொகுதியில் ஏமாந்து போனோம். இனி ஏமாற மாட்டோம், விஞ்ஞானப் பூர்வமாக பெண்ணாகரம் பார்முலா செயல்படுத்தப்படும். அங்கே நாம் தான் உண்மையான வெற்றி பெற்றோம். பா.ம.க., துணையின்றி யாரும் ஆட்சி அமைக்க முடியாது. எதிர்காலத்தில் தமிழகத்தை பா.ம.க., ஆளும். இவ்வாறு முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி பேசினார். பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியதையடுத்து மதுவிலக்கு அமல்படுத்துவதாக கூறிய முதல்வருக்கு நன்றி தெரிவித்து, கட்சியின் மாவட்ட பொதுக்குழுவில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
No comments:
Post a Comment