சென்னை கோட்டூர்புரத்தில், 172 கோடி ரூபாய் செலவில் சர்வதேச தரத்தில் கட்டப்பட்டுள்ள மாநில நூலகம், அண்ணாதுரை பிறந்த நாளான செப்., 15ம் தேதி திறக்கப்படுகிறது. ஓரிரு நாட்களில் இறுதிக் கட்டப் பணிகள் முடிய உள்ள நிலையில், முதல்வர் கருணாநிதி நேற்று நேரில் சென்று நூலகத்தை பார்வையிட்டார்.
தமிழகத்தில் 4,028 நூலகங்கள் இயங்கி வருகின்றன. இதில், பெரிய நூலகமாக கன்னிமாரா நூலகம் இருந்து வருகிறது. இதை விட அதிக நூல்களைக் கொண்ட மிகப் பெரிய நவீன நூலகத்தைக் கட்ட முடிவெடுத்து, 2007-08ம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. சென்னை கோட்டூர்புரத்தில், அண்ணா பல்கலை வளாகத்தை ஒட்டி எட்டு ஏக்கர் பரப்பிலான இடத்தில், எட்டு அடுக்குகளுடன் 120 கோடி ரூபாய் செலவில், சர்வதேச தரத்தில் மாநில நூலகம் கட்டும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்கு, 2008ம் ஆண்டு ஆகஸ்ட் 16ம் தேதி, முதல்வர் கருணாநிதி அடிக்கல் நாட்டினார். அக்டோபர் மாதம் துவங்கிய கட்டுமானப் பணிகள் விறுவிறுப்பாக நடந்தன.
முதல்வர் கருணாநிதி, நூலகத் துறைக்கு பொறுப்பு வகிக்கும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் அடிக்கடி நேரில் சென்று, கட்டுமானப் பணிகளை பார்வையிட்டு பணிகளை முடுக்கி விட்டனர். இதன் காரணமாக, 22 மாதங்களில் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. கட்டுமானப் பணிகள் முடிந்து, உள் அலங்கார வேலைப் பாடுகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. நூல்களை அடுக்கும் பணியும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில், முதல்வர் கருணாநிதி நேற்று காலை நேரில் சென்று நூலகத்தை பார்வையிட்டார். முதல்வருடன், அமைச்சர்கள், நூலகத் துறை இயக்குனர் அறிவொளி ஆகியோர் சென்றிருந்தனர். மூன்று தளங்கள் வரை சென்று, நூலகத்தை முதல்வர் பார்வையிட்டார்.
முதல்வர் மகிழ்ச்சி: நினைத்தபடி மிக நேர்த்தியாக நூலகத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்றிருப்பது குறித்து, அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் முதல்வர் மகிழ்ச்சி தெரிவித்தார். இதையடுத்து, அண்ணாதுரை பெயரில் அமைக்கப் பட்டுள்ள நூலகத்தை, அவரது பிறந்த நாளான செப்., 15ம் தேதியே திறப்பு விழாவை வைத்துக் கொள்ள முதல்வர் ஒப்புதல் வழங்கியுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்படி, அடுத்த மாதம் 15ம் தேதி அண்ணாதுரை நூற்றாண்டு நூலகத்தை, முதல்வர் கருணாநிதி திறந்து வைக்கிறார். ஐ.டி., நிறுவனம் போல், அழகான வடிவமைப்புடன் பிரமாண்டமான முறையில் மாநில நூலகம் உருவாக்கப்பட்டு உள்ளது.
ஆரம்பத்தில் 120 கோடி ரூபாய் செலவில் கட்டுவதற்கு திட்டமிட்டிருந்த போதும், பின்னர் படிப்படியாக திட்ட ஒதுக்கீடு 172 கோடியே 17 லட்சம் ரூபாயாக உயர்ந்தது. ஆசியாவில் மிகப் பெரிய நூலகம் சிங்கப்பூரில் உள்ளது. இரண்டாவது மிகப் பெரும் நூலகம் என்ற பெருமையை சென்னையில் கட்டப்படும் நூலகம் பெறுகிறது. பல்வேறு நவீன தொழில்நுட்ப வசதிகளுடனும், வாசகர்களை கவரும் வகையிலும் நூலகம் உருவாக்கப்பட்டுள்ளது.
நூலகத்தில் உள்ள வசதிகள்: எட்டு தளங்கள், 3 லட்சத்து 33 ஆயிரத்து 140 சதுர அடி பரப்பளவில் நூலகம் கட்டப் பட்டுள்ளது. தரை தளத்தில், வரவேற்பறை, பிரெய்லி முறையிலான புத்தகங்கள், இரண்டு கருத்தரங்கு கூடங்கள் உள்ளிட்டவை அமைந்துள்ளன. முதல் தளத்தில் சிறுவர்கள் பிரிவு, நாளிதழ்கள் மற்றும் பருவ இதழ்கள், வாசகர்கள் படிப்பதற்கு விசாலமான அறை ஆகியவையும், இரண்டாவது தளத்தில் தமிழ் நூல்களும் இடம் பெறுகின்றன. மூன்றாவது தளத்தில் ஆங்கில நூல்கள், நான்காவது தளத்தில் தமிழ் அல்லாத திராவிட மொழி நூல்கள் மற்றும் இதர இந்திய மொழி நூல்கள், ஐந்தாவது தளத்தில் பழைய நாளிதழ்கள், பருவ இதழ்கள் இடம் பெறுகின்றன. ஆறாவது தளத்தில் அரசு ஆவணங்கள், ஏழாவது தளத்தில் நன்கொடையாளர்கள் வழங்கிய புத்தகங்கள், ஆடியோ - வீடியோ பிரிவு ஆகியவையும், எட்டாவது தளத்தில் அரிதான நூல்கள், பாதுகாக்கக் கூடிய நூல்கள், புகைப்படங்கள் மற்றும் டிஜிட்டல் நூலகம் ஆகியவை அமைகிறது. ஒட்டு மொத்த நூலகத் துறை வளர்ச்சியடைவதற்கு உந்து சக்தியாக மாநில நூலகம் அமையுமென பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள் நம்புகின்றனர்.
புட் கோர்ட், காபி ஷாப்...! இந்நூலகத்தில் ஒரே நேரத்தில் 1,200 வாசகர்கள் அமர்ந்து நூல்களை படிக்க முடியும். 200 பேர் அமரும் வகையில் ஒரு கருத்தரங்க கூடமும், 30 பேர் அமையும் வகையில் ஒரு கருத்தரங்கு கூடமும் அமைக்கப்படுகின்றன. 1,280 பேர் அமரக்கூடிய மிகப்பெரிய கூட்ட அரங்கம், மிகப்பெரிய அளவில் பார்க்கிங் வசதி, புட் கோர்ட், காபி ஷாப் என, "ஹைடெக்' முறையில் அசத்தலாக பல்வேறு வசதிகள் அமைகின்றன. முக்கியமாக, நூலகத்தில் 12 லட்சம் புத்தகங்கள் இடம்பெறுகின்றன. முதற்கட்டமாக, திறப்பு விழாவின்போது 4 லட்சம் புத்தகங்கள் வைக்கப்படுகின்றன. இதற்கான புத்தகங்கள், நூலகத்தில் அடுக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அடுத்த ஆண்டில் 4 லட்சம் புத்தகங்களும், அதற்கு அடுத்த ஆண்டில் 4 லட்சம் புத்தகங்களும் வைக்கப்பட உள்ளன. இந்த நூலகத்தில் பணிபுரிவதற்காக பிரத்யேகமாக போட்டித் தேர்வு மூலம் 100 அலுவலர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். வரும் 29ம் தேதி தேர்வு நடக்கிறது. அடுத்த ஒரு வாரத்தில் முடிவை வெளியிட்டு, நூலக திறப்பு விழாவின் போது அலுவலர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்படும் என தெரிகிறது.
No comments:
Post a Comment