Search This Blog

Wednesday, November 24, 2010

பீகார் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி சாதனை

பீகாரில் நடந்த சட்டசபை தேர்தலில், ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கட்சிகள் இடம் பெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி, நான்கில் மூன்று பங்கு பெரும்பான்மைபெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. நிதிஷ்குமார் இரண்டாவது முறையாக முதல்வராகிறார். ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் லோக் ஜனசக்தி கூட்டணி கடும் தோல்வியைத் தழுவியுள்ளது. காங்கிரஸ் கட்சி வெறும் நான்கு இடங்களை மட்டுமே பிடித்துள்ளது.

பீகாரில் மொத்தமுள்ள 243 சட்டசபை தொகுதிகளுக்கும் ஆறுகட்டமாக தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில், ஐக்கிய ஜனதாதளம்-பா.ஜ., கூட்டணி கட்சிகள் இடம் பெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி ஒரு அணியாகவும், லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம், ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி ஆகியவை ஒரு அணியாகவும், காங்கிரஸ் கட்சி ஒரு அணியாகவும் போட்டியிட்டன. ஒரு மாதமாக நடந்த ஆறு கட்டத்தேர்தலில் பதிவான ஓட்டுகள் நேற்று எண்ணப்பட்டன. இதில், தேசிய ஜனநாயக கூட்டணி 206 இடங்களைப் பிடித்துள்ளது. லாலு - பஸ்வான் கட்சிகளின் கூட்டணி 25 இடங்களையும், காங்கிரஸ் நான்கு இடங்களையும், இதர கட்சிகள் எட்டு தொகுதிகளையும் பிடித்துள்ளன. நிதிஷ்குமார் தலைமையிலான ஆளும் கூட்டணி, நான்கில் மூன்று பங்கு பெரும்பான்மை பெற்றுள்ளது. இதனால், நிதிஷ்குமார் மீண்டும் முதல்வராகிறார். கடந்த 2005 சட்டசபை தேர்தலில் 143 இடங்களைப் பிடித்த ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி, இம்முறை 206 இடங்களைப் பிடித்து மெகா சாதனை படைத்துள்ளது. முஸ்லிம் சமூகத்தினர் அதிகமாக வசிக்கும் பகுதிகளிலும் இந்தக் கூட்டணி கணிசமான இடங்களைபிடித்துள்ளது. கடந்த 2005 தேர்தலில் 64 இடங்களை பிடித்த லாலு - பஸ்வான் கூட்டணி இம்முறை 25 இடங்களை மட்டுமே பிடித்துள்ளது; 39 இடங்களை பறிகொடுத்துள்ளது. கடந்த தேர்தலில் ஒன்பது இடங்களைப் பிடித்த காங்கிரஸ், இம்முறை நான்கு இடங்களை மட்டுமே பெற்றுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் ஒரு தொகுதியிலும், சுயேச்சைகள் மூன்று தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

ரப்ரிதேவி தோல்வி: முன்னாள் முதல்வரும், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான லாலுவின் மனைவி ரப்ரி தேவி, இந்த தேர்தலில் ரகோபூர் மற்றும் சோனேபூர் என, இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார்; இரண்டிலும் தோல்வி அடைந்தார்.

தேர்தல் வெற்றி குறித்து பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கூறியதாவது: ஜாதி அடிப்படையில் அரசியல் நடத்தியவர்கள், இந்த தேர்தல் வெற்றி மூலம் அதிருப்தி அடைவர். தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என, கருத்து கணிப்புகள் தெரிவித்தன. அவற்றை எல்லாம் லாலு பிரசாத் யாதவ் விமர்சித்தார். ஆனால், கருத்துக் கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டது போலவே, தேசிய ஜனநாயக கூட்டணி அபார வெற்றி பெற்றுள்ளது. அதனால், மீடியாக்களின் செயல்பாடுகளை தேவையில்லாமல் விமர்சிப்பதை தவிர்க்க வேண்டும். பீகாரில் எனது தலைமையிலான புதிய அரசு, வரும் வெள்ளியன்று பதவியேற்கிறது. பாட்னாவில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த காந்தி மைதானத்தில் பதவியேற்பு விழா நடைபெறும். தேசிய ஜனநாயக கூட்டணியின் சட்டசபை கட்சிக் கூட்டம் நாளை (இன்று) நடைபெறும். அதில், சட்டசபை கட்சித் தலைவர் தேர்வு செய்யப்படுவார்.

தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்திற்கு முன்னதாக, ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பா.ஜ., எம்.எல்.ஏ.,க்களின் கூட்டம் தனியாக நடைபெறும். அவற்றில், அந்தக் கட்சிகளின் சட்டசபை தலைவர்கள் தேர்வு செய்யப்படுவர். இவ்வாறு முதல்வர் நிதிஷ்குமார் கூறினார். கவர்னர் டி.என்.கொன்வரை நேற்று மதியம் சந்தித்த முதல்வர் நிதிஷ்குமார் தன் ராஜினாமா கடிதத்தை அளித்தார். ராஜினாமாவை ஏற்றுக் கொண்ட கவர்னர், புதிய அரசு அமைக்கும் வரை பதவியில் தொடரும்படி கேட்டு கொண்டார். அத்துடன் பீகாரின் 14வது சட்டசபையும் கலைக்கப்பட்டது.

நிதிஷ்குமாருக்கு வாழ்த்துக்கள் குவிகின்றன: பீகார் சட்டசபை தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றதையடுத்து, பல்வேறு தரப்பில் இருந்தும் முதல்வர் நிதிஷ்குமாருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. முதல்வர் நிதிஷ்குமாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் மன்மோகன் சிங், தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்ததோடு, "பீகாரின் வளர்ச்சிக்காக, மாநில அரசுடன் இணைந்து மத்திய அரசு செயல்படும்' என்றார்.

தேர்தல் வெற்றி குறித்து பா.ஜ., தலைவர் நிதின் கட்காரி கூறுகையில், ""21ம் நூற்றாண்டின் அரசியல், வளர்ச்சி சார்ந்த அரசியலே அன்றி, ஜாதி அடிப்படையிலான அரசியல் அல்ல என்பதை தேர்தல் முடிவுகள் காட்டியுள்ளன,'' என்றார்.

பா.ஜ., மூத்த தலைவர் அருண் ஜெட்லி கூறுகையில், ""பீகாரில் கூட்டணியையும், அரசையும் நிதிஷ்குமார் நடத்திச் சென்ற விதத்தை நினைத்து நாங்கள் மிகுந்த பெருமைப்படுகிறோம். குடும்ப மற்றும் வம்சாவளி அரசியலைத் தாண்டி, தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது,'' என்றார். "பீகாரில் ஆளும் கூட்டணி வெற்றி பெற்றதற்கு முதல்வர் நிதிஷ்குமாரே காரணம். அவரின் ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு நிலவரம் நன்றாக மேம்பட்டுள்ளது' என, காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. இதேபோல, வேறு பல கட்சிகளின் தலைவர்களும் முதல்வர் நிதிஷ்குமாருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

நிதிஷ்குமாருக்கு அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: பீகார் சட்டசபை தேர்தலில், எதிர்கட்சிகளின் அச்சுறுத்தலான செயல்பாடுகளையும் மீறி பெரும்பான்மையான தொகுதிகளில் உங்கள் கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. அதற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். சிறந்த நிர்வாகம், நேர்மையான ஆட்சியை தொடர்ந்து மக்களுக்கு அளிப்பதற்கு இந்த தேர்தல் முடிவுகள் வழிவகுத்துள்ளன. மீண்டும் முதல்வராக பதவி ஏற்று, வெற்றிகரமாக பணியாற்ற வாழ்த்துகிறேன். இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.

தோல்வியை ஏற்கிறேன்: லாலு பிரசாத்: ""பீகார் சட்டசபை தேர்தலில் எங்கள் கூட்டணிக்கு ஏற்பட்ட தோல்வியை பணிவுடன் ஏற்கிறேன். திகைப்படைய வைக்கும் இந்தத் தேர்தல் முடிவுகளுக்கான காரணங்கள் குறித்து ஆய்வு செய்வோம்,'' என ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் லாலு கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், ""தேர்தலில் வெற்றி பெற்ற நிதிஷ்குமாருக்கு எனது வாழ்த்துக்கள். நிதிஷ்குமார்மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளதால், தேர்தல் வாக்குறுதிகளை அவர் குறிப்பிட்ட கால அளவுக்குள் நிறைவேற்றுவார் என, எதிர்பார்க்கின்றனர். வளர்ச்சிக்காக மக்கள் ஓட்டளித்துள்ளனர்,'' என்றார்.

No comments: