Search This Blog

Tuesday, November 2, 2010

கூட்டணி ஆட்சி நடக்கும் மாநிலங்களில் வலுப்படுத்துங்கள்: சோனியா

"சில மாநிலங்களில் கூட்டணி வைத்து கொள்கிறோம் என்பதற்காகவே, அங்கெல்லாம் நமது கட்சிக்கு செல்வாக்கு இல்லையென்ற முடிவுக்கு தொண்டர்கள் வந்துவிட வேண்டாம்' என, காங்., தலைவர் சோனியா கூறினார். மேலும் உத்தர பிரதேசம், தமிழகம் போன்ற மாநிலங்களில் எளிய மக்களை மேம்படுத்தும் விதத்தில், தொண்டர்கள் பாடுபட்டால் இம்மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை பிடிப்பது நிச்சயம் என்றும் ராகுல் பேசினார்.

புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்களின் கூட்டம், நேற்று டில்லியில் நடைபெற்றது. ஆயிரத்துக்கும் அதிகமான உறுப்பினர்கள் கலந்து கொண்ட இந்த கூட்டம், டில்லி தல்கோட்ரா மைதான உள்ளரங்கில் நேற்று காலையில் துவங்கி, மதியம் 1 மணியுடன் முடிவடைந்தது.

புதிய உறுப்பினர்களை வரவேற்று, காங்கிரஸ் தலைவர் சோனியா பேசியதாவது:சில நாட்களுக்கு முன்பு வரை காஷ்மீர் நிலவரம் மிகவும் கவலையளிக்க கூடிய வகையில் இருந்தன. ஆனால் அடுத்தடுத்து எடுக்கப்பட்ட சீரிய நடவடிக்கைகள் காரணமாக, அங்கு தற்போது அமைதியும், சகஜ நிலைமையும் திரும்பியுள்ளது. அங்குள்ள பிரச்னைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும்.உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக நக்சலைட் பிரச்னை உள்ளது. அரசாங்கத்தின் அதிகாரம் குறித்து கேள்வி எழுப்பினால் நடவடிக்கை எடுப்பதை தவிர்க்க இயலாது. அதே சமயம் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரங்களை அழிப்பதும் ஏற்க முடியாத ஒன்று. அவர்களது மேம்பாட்டிற்கு நலத்திட்டங்களை அமல்படுத்த வேண்டியது அவசியம்.கடந்த 2004ம் ஆண்டில் மத்தியில் பொறுப்பேற்றுக் கொண்டதில் இருந்து நலத்திட்டங்களை நிறைவேற்றுவதிலேயே குறியாக உள்ளோம். பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தை லோக்சபாவில் நிச்சயம் நிறைவேற்றுவோம். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு மாநில அரசுகளுக்கும் உள்ளது. பொது வினியோக திட்டத்தை சீரமைத்து, பதுக்கல் நடவடிக்கைகளை ஒழித்து கட்ட வேண்டும்.நியாயப்படுத்தாது: லக்னோ ஐகோர்ட் அளித்துள்ள அயோத்தி தீர்ப்பு என்பது, எந்த வகையிலும் பாபர் மசூதி இடிக்கப்பட்டதை நியாயப்படுத்தி விடாது. மசூதியை இடித்தது கிரிமினல் குற்றம்.

குற்றவாளிகளை சட்டத்தின் முன் கட்டாயம் நிறுத்த வேண்டும்.சில மாநிலங்களில், பிற கட்சிகளுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்துள்ளது. பிற கட்சிகளுடன் கூட்டணியில் இருக்கிறோம் என்பதற்காகவே, அம்மாநிலங்களில் நமக்கு செல்வாக்கு இல்லவே இல்லை என்ற முடிவுக்கு தொண்டர்கள் வந்துவிடக் கூடாது. கூட்டணி கட்சிகளை மதிக்கிறோம். அதற்காக நாம் வளர வேண்டிய இடத்தை, மற்றவர்களுக்காக விட்டுத் தரமுடியாது. அடுத்த இரு ஆண்டுகளில், நடக்க இருக்கின்ற 10 சட்டசபை தேர்தல்களுக்கு தயாராக வேண்டும். கட்சியை பலப்படுத்த பல மடங்கு உழைக்க முன்வர வேண்டும்.இவ்வாறு சோனியா பேசினார்.

இருபது நிமிடங்கள் பேசிய சோனியா, ஒரு இடத்தில் கூட பீகார் தேர்தல் குறித்தோ, காமன்வெல்த் போட்டி ஊழல் மற்றும் ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல் குறித்தோ குறிப்பிடவே இல்லை.

சோனியாவுக்கு பிறகு பிரதமர் மன்மோகன் சிங் பேசுகையில், "காஷ்மீர் நிலவரம் கவலையளிப்பதாக இருந்தாலும், தற்போது நிலைமை மேம்பட்டுள்ளது. அங்கு அரசியல் தீர்வு அவசியம். பழங்குடியின மக்களுக்கு வேண்டிய திட்டங்களை நிறைவேற்றுவதில், அரசாங்கம் ஆர்வமாகவும், விழிப்புடனும் உள்ளது' என்றார்.

நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி பேசும் போது, "முன்பெல்லாம் நலத்திட்டங்கள் நிறைவேற்றப்படும் போது, சட்டப் பாதுகாப்பு இருக்காது. ஆனால் இப்போது அப்படியல்ல. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் தனது ஆட்சியில் செயல்படுத்தி வரும் மக்கள் நல திட்டங்கள் எல்லாவற்றுக்குமே, சட்டப் பாதுகாப்பையும் உள்ளடக்கியவையாக இருந்து வருகின்றன.இது மிகவும் வரவேற்கத்தக்கது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் மாநில அரசுகளின் பங்கு மிகவும் அவசியம். பதுக்கல் நடவடிக்கைகளை ஒழிப்பதில் மாநில அரசுகள் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். பணவீக்கம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. சில மாதங்களுக்கு முன் இரட்டை இலக்கத்துடன் இருந்த பணவீக்கம், தற்போது 8.6 சதவீதமாக உள்ளது. அரிசி, கோதுமை போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களை மிகவும் குறைவான விலையில் தான் மத்திய அரசு வழங்கி வருகிறது' என்றார்.

பின்னர் ராகுல் பேசும் போது, "நான் நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறேன். இந்த பயணத்தில் நான் இரண்டு இந்தியாக்களை பார்க்கிறேன். ஒன்று வளர்ச்சியும், முன்னேற்றமும் அடைந்த இந்தியா. மற்றொன்று வறுமையுடன் போராடும் இந்தியா. இந்த இரண்டுக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைக்க வேண்டும். இதை நோக்கமாக வைத்தே நலத்திட்டங்கள் இயற்றப்பட வேண்டும்.மிகப்பெரிய மாநிலங்களான உத்தர பிரதேசத்திலும், தமிழகத்திலும் காங்கிரஸ் கட்சி மிகவும் பலவீனமாக உள்ளதென்று பலரும் கருதுகின்றனர். இந்த நிலை மாற வேண்டும். இம்மாநிலங்களில் ஏழை, எளிய மக்களின் முன்னேற்றத்திற்காக கட்சி தொண்டர்கள் பாடுபட்டால், நிச்சயம் ஆட்சியையே பிடிக்கலாம்' என்றார்.இக்கூட்டத்தில் சுரேஷ் கல்மாடி, மகாராஷ்டிர முதல்வர் சவான், டில்லி முதல்வர் ஷீலா தீட்சித் ஆகிய சர்ச்சைக்குரியவர்களும் கலந்து கொண்டனர்.

No comments: