Search This Blog

Monday, February 6, 2012

தாதாக்களின் ராஜ்ஜியத்தில் உ.பி.

பிரிக்க முடியாதது எதுவோ என்றால், உத்தர பிரதேச அரசியலும், தாதாக்களும் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்திருக்கின்றன. உலகப் புகழ் பெற்ற சம்பல் கொள்ளைக்காரி பூலன்தேவியையே எம்.பி.,யாகத் தேர்ந்தெடுத்து, அழகு பார்த்த மாநிலம் உ.பி., எனும்போது, வேறு என்ன விவரம் வேண்டும்?

ஒரு பெண்ணாக இருந்ததால், பூலன்தேவி பிரபலமாகிவிட்டாரே தவிர, அவருக்குச் சற்றும் சளைக்காத தாதாக்கள், உ.பி., அரசியலில் உண்டு. கட்சி பாகுபாடு இல்லாமல், எல்லாருமே தாதாக்களுக்கு இடம் கொடுத்தாலும், அதிக இடஒதுக்கீடு வழங்கிய பெருமை, கட்சியினரால், "நேதாஜி' என்றழைக்கப்படும் முலாயம் சிங்கையே சேரும்.மொத்தம் ஏழு கட்டமாக நடக்கும் தேர்தலில், நாளை நடக்கும் முதல் கட்டத்தில் மட்டுமே 109 வேட்பாளர்கள், கிரிமினல் பின்னணி கொண்டவர்கள் என, பட்டியலிடுகிறது, உத்தர பிரதேச தேர்தல் கண்காணிப்புக் குழு என்ற தனியார் தன்னார்வ நிறுவனம்.ஒவ்வொரு கட்சி சார்பிலும் நிறுத்தப்பட்டுள்ள, "தலை'களின் பட்டியலைப் போட்டால் பக்கம் பத்தாது. சாம்பிளுக்கு மட்டும் சிலரைப் பார்க்கலாம்.

முதலில், புரட்சிப் புயல் ராகுலின் மேற்பார்வையிலான, காங்கிரஸ் கட்சி. ஜமானியா தொகுதியில் போட்டியிடும் கலாவதி பிந்த் என்ற பெண், முதல் முறையாக சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுகிறார். அவரது தகுதி, அடியாட்களோடு சேர்ந்து ஒரு போலீஸ்காரரை கொன்ற வழக்கு.பாப்பன் ராஜ்பர் என்பவர் ராஸ்ரா தொகுதியில் போட்டியிடுகிறார். பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து கழற்றி விடப்பட்ட இவர் மீதுள்ள வழக்குகள் கொள்ளை, வழிப்பறி, ஆள் கடத்தல், கொலை முயற்சி.பிந்த்ராவிலிருந்து போட்டியிடும் அஜய் ராய் மீது கொள்ளை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. அண்ணன் இதற்கு முன், பா.ஜ.,வில் இருந்தவர். இப்படி, பக்கீர் சித்திக்கி (லக்னோ மத்தி), விஜய் துபே (கட்டா) என, ஏராளமான தாதாக்களுக்கு தஞ்சமளித்துள்ளது காங்கிரஸ்.

சமாஜ்வாடி கட்சி:இனி, சமாஜ்வாடி கட்சியின் முறை. கப்தான் சிங் ராஜ்புத் (சர்க்காரி), தன் சகோதரருடன் இணைந்து, மகுபா மற்றும் ஜாலோன் பகுதிகளில் ஒரு கொள்ளைக் கும்பலையே நடத்தி வந்தவர். இந்தக் கும்பல் மீது 15க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.திபாய் தொகுதியில் போட்டியிடும் பக்வான் சர்மா மூன்று முறை கைது செய்யப்பட்டவர். ஒன்று கொலை, அடுத்தது கற்பழிப்பு, மூன்றாவது அதிகாரிகள் கடத்தலுக்காக. அம்ரோகாவைச் சேர்ந்த மெகபூப் அலி மீது 24 வழக்குகள் உள்ளன. குண்டர் சட்டத்திலும் சிறை சென்ற பெருமை இவருக்கு உண்டு. இவர்கள் மட்டுமின்றி, அபய் சிங் (கொசோய்கஞ்ச்), மித்ராசென் யாதவ் (பிகாபூர்), விஜய் மிஸ்ரா (அலகாபாத்) என, சமாஜ்வாடி சிங்கங்களுக்கும் பஞ்சமில்லை.

பகுஜன் சமாஜ் கட்சி:எதிர்க்கட்சியிலேயே இவ்வளவு எனும்போது, ஆளுங்கட்சியான பகுஜன் சமாஜ் கட்சி மட்டும் சளைத்ததா என்ன? ராம்சேவக் படேல் (பதாவ்ன்), இந்திரபிரதாப் திவாரி (கொசோய்கஞ்ச்), மனோஜ் திவாரி (பிரதாப்கர்), ஹாஜி அலிம் (புலந்த்சர்), நூர் சலீம் ராணா (சர்த்தாவால்) என, ஏகப்பட்ட தாதாக்கள் தேர்தலில் மும்முரமாக உள்ளனர். இத்தனைக்கும், "கிரிமினல் பின்னணி கொண்ட பல அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களுக்கு இம்முறை சீட் கொடுக்கவில்லை' என, மார்தட்டிக் கொண்டிருக்கிறார் முதல்வர் மாயாவதி. கழித்தது போகவே இவ்வளவு என்றால், மொத்தமும் சேர்ந்தால் என்னவாகும்?

நம்மூரில் அமைதியின் உருவமாகத் திகழும் பா.ஜ.,வில் கூட ராதேஷ்யாம் குப்தா (பதேபூர்), லல்லு சிங் (அயோத்தி), சந்த்ராம் செங்கேர் (மாதவ்கர்), பாவன் சிங் (காட்ரா), உதய்பன் கார்வாரியா (அலகாபாத்) என, ஏராளமான தாதாக்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். என்.ஆர்.எச்.எம்., ஊழல் புகழ் பாபுசிங் குஷ்வாகாவுக்கும் தாராள மனதோடு இடம் கொடுத்தது பா.ஜனதா. கட்சிக்குள்ளேயே எழுந்த கடும் எதிர்ப்பு காரணமாக, சீட் கொடுக்காமல் விட்டுவிட்டது.இவர்கள் தவிர, அதீக் அகமது என்பவர், கொள்ளைக் கும்பலின் தலைவனாக இருந்து, 136 வழக்குகளில் (ஆம், 136) போலீசாரால், "தேடப்பட்டவர்.' புல்புர் பகுதியின் எம்.பி.,யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போதைய தேர்தலிலும், சிறையில் இருந்தபடியே போட்டியிடுகிறார், அப்னா தள் கட்சி சார்பாக.

ஒரு டஜன் வழக்குகள்:இதே கட்சியின் இன்னொரு வேட்பாளரான முன்னா பஜ்ரங்கியின் மீது, ஒரு டஜனுக்கும் மேற்பட்ட வழக்குகள் இருக்கின்றன. அண்ணன் இப்போது திகார் சிறையில் இருந்தபடியே கட்சிப் பணியாற்றி வருகிறார்.சுத்தமான இமேஜ் இருப்பதாகச் சொல்லி களமிறங்கியிருக்கும், "பீஸ் பார்ட்டி'யில் கூட அகிலேஷ் சிங், ஜிதேந்திர சிங் பப்லூ போன்ற தாதாக்களுக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது.

35 சதவீதம்கிரிமினல்கள் :கட்சிகள் அறிவித்துள்ள வேட்பாளர் பட்டியலில் 35 சதவீதம் பேர் கிரிமினல் பின்னணி கொண்டவர்கள். இதில் 30 சதவீதம் பேர், கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற கொடுங்குற்றம் சாட்டப்பட்டவர்கள். சிறப்பம்சம் என்னவென்றால், இந்தத் தேர்தலில் 60க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள், சிறையில் இருந்தபடியே போட்டியிடுவது தான்.உ.பி., அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா

No comments: