Search This Blog

Monday, February 6, 2012

சஸ்பெண்ட், வெளியேற்றத்துக்கு பஞ்சமில்லை: அனல் பறந்த கூட்டத்தொடர்

முந்தைய சட்டசபை கூட்டத்தொடர், ஆளுங்கட்சி மாநாடு போல இருந்த நிலையில், சமீபத்தில் நடந்த சட்டசபை கூட்டத்தொடர் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

புதிய ஆட்சி அமைந்ததும், கடந்த ஆண்டு கவர்னர் உரை, பட்ஜெட் போன்றவற்றுக்காக சட்டசபை கூட்டத்தொடர் நடந்தது. அந்த தொடரில், தி.மு.க.,வினர் விவாதத்தில் கலந்து கொள்ளவில்லை. மற்ற கட்சிகளை பொறுத்தவரை, எதிர்க்கட்சியான தே.மு.தி.க., கம்யூனிஸ்ட்கள் மற்றும் உதிரி கட்சிகள், ஆளுங்கட்சிக்கு ஆதரவாகவே பேசினர்.காங்., - பா.ம.க., கட்சியினர் கூட விமர்சித்து பேசவில்லை. இதனால், சட்டசபையில் பெரிய அளவில் குறுக்கீடுகளோ, கூச்சல், குழப்பமோ ஏற்படவில்லை. புதிதாக பொறுப்பேற்ற ஆளுங்கட்சியினரும், மற்ற கட்சியினரும், முதல்வரை பாராட்டி புகழ்மாலை பாடியதால், அ.தி.மு.க., பொதுக்கூட்டம் போல கூட்டத்தொடர் இருந்தது.

ஆனால், இந்த தொடர் துவங்குவதற்கு முன், உள்ளாட்சித் தேர்தலின் போது, கூட்டணி கட்சிகளை ஒதுக்கிவிட்டு, அ.தி.மு.க., தனித்து களமிறங்கியது. அப்போது முதல், கூட்டணியில் இருந்த கட்சிகள் அதிருப்தியில் காணப்பட்டன. அத்துடன், பஸ் கட்டணம், பால் விலை, மின் கட்டண உயர்வு போன்ற அறிவிப்புகள், ஆளுங்கட்சியை விமர்சிப்பதற்கு ஒரு காரணமாக எதிர்க்கட்சிகளுக்கு கிடைத்தது.இந்த சூழ்நிலையில், கவர்னர் உரையுடன் கடந்த மாதம் 30ம் தேதி சட்டசபை கூட்டத்தொடர் துவங்கியதும், கவர்னர் உரையை புறக்கணித்து தி.மு.க., வெளிநடப்பு செய்தது. மற்ற நாட்களில், தே.மு.தி.க., - மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் அரசை விமர்சித்து பேசின. இதனால், ஒவ்வொருவரது பேச்சுக்கும் அமைச்சர்கள் எழுந்து பதிலளித்தவாறு இருந்தனர். சபையில் முதல்வர் இருந்த போதெல்லாம், ஒவ்வொரு விமர்சனத்துக்கும் குறுக்கிட்டு பதிலளித்தார்.

தி.மு.க.,வை பொறுத்தவரை, ஆரம்பமே அதிர்ச்சியாகத் துவங்கியது. சட்டசபை கூட்டத்தொடர் துவங்கியதும், தி.மு.க., எம்.எல்.ஏ., ராஜாவை 10 நாட்கள் சஸ்பெண்ட் செய்வதாக சபாநாயகர் அறிவித்தார். அத்துடன் தி.மு.க., இந்த தொடரை புறக்கணிக்கும் என எதிர்பார்த்தனர். ஆனால், வெளிநடப்பு செய்த தி.மு.க.,வினர் மீண்டும் வந்து விவாதத்தில் கலந்து கொண்டனர்.இதனால், தி.மு.க.,வினர் பேசிய போதெல்லாம், சட்டசபையில் அனல் பறந்தது. ஒவ்வொரு வரிக்கும், அமைச்சர்கள் எழுந்து நீண்ட விளக்கம் அளித்தனர். தி.மு.க., தலைவரை யாராவது விமர்சித்து பேசினால், அக்கட்சியினர் அனைவரும் எழுந்து நின்று எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், அடிக்கடி வெளியேற்றப்பட்டனர்.

அதே நேரத்தில், பிரதான எதிர்க்கட்சியான தே.மு.தி.க., இனியும் நாம் மிகவும் அமைதியாக விமர்சித்தால், தி.மு.க.,வுக்கு தான் பெயர் கிடைக்கும் என்று கருதியது. இதனால், தே.மு.தி.க.,வும் ஆவேசத்தை துவக்கியது. இதன் காரணமாக, முதல்வர் ஜெயலலிதாவும், விஜயகாந்தும் நேரடியாக வாக்குவாதம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டு, விஜயகாந்த் சஸ்பெண்ட் வரை சென்றது.விஜயகாந்துக்கு ஆதரவாக, தி.மு.க., - கம்யூனிஸ்ட் கட்சிகள் கைகோர்த்து வெளிநடப்பு செய்தன. இவற்றை எல்லாம் காங்., - பா.ம.க., கட்சிகள் வேடிக்கை பார்த்தன. தொடர்ந்து, தே.மு.தி.க.,வினர் கறுப்புச் சட்டை அணிந்து வந்தது போன்ற சம்பவங்கள் நடந்தன.

இதனால், கடந்த ஆண்டு நடந்த சட்டசபை கூட்டத்தொடருக்கும், இம்முறை நடந்த தொடருக்கும் பெரும் வித்தியாசம் காணப்பட்டது. சட்டசபை என்றால் அமளி இல்லாமலா என்ற எதிர்பார்ப்பை, இந்த தொடர் நிறைவேற்றியது. கடுமையான விவாதங்கள் இடம்பெறாத போதிலும், பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் நடந்து முடிந்தது சட்டசபை தொடர். அடுத்து, பட்ஜெட் கூட்டத்தொடர் நடக்க உள்ளதால், இதை விட அனல் பறக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

காங்கிரசின் "பஞ்ச பாண்டவர்கள்' பாராமுகம்:சட்டசபையிலிருந்து எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்தை, 10 நாட்கள் சஸ்பெண்ட் செய்த நடவடிக்கைக்கு, காங்கிரஸ் கட்சியின் "பஞ்ச பாண்டவர்கள்' வெளிநடப்பு அல்லது எதிர்ப்பு தெரிவிக்கும் நிலைப்பாட்டை எடுக்கவில்லை. அவர்களிடம் ஒற்றுமை உணர்வு இல்லாமல் இருப்பதாலும், ஆளுங்கட்சியினர் அதிருப்திக்கு ஆளாகி விடுவோமோ? என்ற காரணத்தாலும் சபைக்குள்ளே பாராமுகமாக அமர்ந்திருந்தனர் என, காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.தமிழக சட்டசபையில், காங்கிரஸ் கட்சியின் பஞ்ச பாண்டவர்களாக விளங்கும் கோபிநாத், பட்டுக்கோட்டை ரங்கராஜன், ஜான் ஜேக்கப், பிரின்ஸ், விஜயதாரணி ஆகியோரிடம் ஒற்றுமை உணர்வு நிலவவில்லை. சட்டசபைத் தலைவர் கோபிநாத், முன்னாள் தலைவர் தங்கபாலுவின் ஆதரவாளர். துணைத் தலைவர் ரங்கராஜன், மத்திய அமைச்சர் வாசனின் ஆதரவாளர். இதனால், அவர்கள் இருவரும் இரு துருவங்களாகச் செயல்படுகின்றனர். சபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது, விஜயதாரணியை தவிர மற்ற நான்கு எம்.எல்.ஏ.,க்களும் பேசினர். விஜயதாரணிக்கு நடந்து முடிந்த ஐந்து நாள் கூட்டத்தொடரில் பேசுவதற்கு வாய்ப்பு அளிக்கவில்லை.

லோக்சபா தேர்தலில் காங்கிரசுடன் தே.மு.தி.க., கூட்டணி அமைத்து போட்டியிடும் வாய்ப்புள்ளதாக இரு கட்சியினரும் எதிர்பார்க்கின்றனர். இந்நிலையில், சஸ்பெண்ட் செய்யப்பட்ட விஜயகாந்துக்கு ஆதரவாக தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ.,க்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.ஆனால், காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் மட்டும் விஜயகாந்திற்கு ஆதரவு நிலை எடுக்கவில்லை. சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் பேசவில்லை. காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் மவுனம் காத்ததால், தமிழக காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டை தெரிவிக்கும் வகையில், மாநிலத் தலைவர் ஞானதேசிகன் அவசரம் அவசரமா அறிக்கை ஒன்றை சமீபத்தில் வெளியிட்டார். அந்த அறிக்கையில், "எதிர்க்கட்சித் தலைவர் என்பவர் ஒரு தனி அந்தஸ்தை எல்லா விதத்திலும் பெறுகிறார்.ஆகவே, விஜயகாந்தை 10 நாட்கள் சபையை விட்டு நீக்கம் என்கிற முடிவை மறுபரிசீலனை செய்து, எதிர்க்கட்சித் தலைவர் தன்னுடைய ஜனநாயக கடமையை சபைக்குள் ஆற்றுவதற்கு வழிவகுக்க வேண்டும்' என குறிப்பிட்டுள்ளார். இந்த அறிக்கையின் மூலம் விஜயகாந்துக்கு, தமிழக காங்கிரஸ் ஆதரவு கரம் நீட்டியுள்ளது என்பது உறுதியாகியுள்ளது.

No comments: