Search This Blog

Friday, July 16, 2010

நேரம் வரும் போது ஒன்றுபடுவோம்

"காங்கிரஸ் கட்சிக்குள் கோஷ்டிகள் இருந்தாலும், நேரம் வரும்போது அனைவரும் ஒன்று சேர்ந்து கொள்வோம்' என, காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன் பேசினார்.பெரம்பூர் மாதவரம் நெடுஞ்சாலையில், திருப்பூர் குமரன் கல்வி மற்றும் தர்ம அறக்கட்டளையால் அமைக்கப்பட்ட காமராஜரின் வெண்கலச் சிலை திறப்பு விழா நேற்று மாலை நடந்தது.

இந்த சிலையை திறந்து வைத்து முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன் பேசுகையில், ""காங்கிரஸ் கட்சியில் தலைவர்களுக்குள் ஒற்றுமை இல்லையென கூறி வருகின்றனர். இன்று, மூன்று தலைவர்கள் ஒரே மேடையில் சேர்ந்துள்ளோம். காமராஜர், மூப்பனாரை விட நாங்கள் பெரிய தலைவர்கள் கிடையாது.


தனித்து நின்று ஆட்சி அமைக்க வேண்டும் என்ற மூப்பனார் எண்ணம் நிறைவேற வேண்டும். அதற்காக செயல்பாடுகளில் தான் அனைவரும் முனைப்பாக இருக்கிறோம். காங்கிரசில் கோஷ்டிகள் மகாத்மா காந்தி காலத்தில் இருந்தே இருக்கிறது; காமராஜர் காலத்திலும் கோஷ்டி இருந்தது. மற்ற கட்சியில் அண்ணன் - தம்பி கோஷ்டி கூட உள்ளது. காங்கிரஸ் தலைவர்களுக்குள் கோஷ்டிகள் இருந்தாலும், ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையில் கட்சியை வளர்க்கின்றனர்; நேரம் வரும் போது ஒன்று சேர்ந்து கொள்வோம்,'' என்றார்.


விழாவில், மாணவர்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கி மத்திய அமைச்சர் வாசன் பேசுகையில், ""இந்த விழா, காங்கிரஸ் முதல் இயக்கமாக வருவதற்கு அடித்தளமாக அமையும் என்பதை என்னால் உணர முடிகிறது. காங்கிரசின் குடும்ப விழாவாக இவ்விழா நடக்கிறது. காங்கிரஸ் தலைவர்களுக்குள் மாற்று கருத்து கிடையாது.


நாங்கள் ஒற்றுமையாகவே இருக்கின்றோம். 43 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சியில் இல்லாவிட்டாலும், தமிழகத்தில் பிற கட்சிகளின் வெற்றி தோல்விகளை நிர்ணயிக்கும் கட்சியாக இருக்கிறது. இந்த இயக்கம் முதல் இயக்கமாக வர வேண்டும். ராகுல் கரத்தை பலப்படுத்த வேண்டும். சோனியாவின் எண்ணங்களை நிறைவேற்ற வேண்டும். அதற்கான உறுதிமொழியை காமராஜர் பிறந்த நாளில் ஏற்போம்,'' என்றார்.


முன்னதாக விழாவிற்கு தலைமையேற்று தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு பேசுகையில், ""காமராஜர் ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் பாலங்கள், அணைகள், பள்ளிகள் அதிகளவில் கட்டப்பட்டன. அது போன்று மீண்டும் ஒரு பொற்காலம் தமிழகத்தில் வர வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினர் விரும்புகின்றனர். அந்த அளவிற்கு காமராஜர் ஆட்சி தனி யுகமாக இருந்தது. காங்கிரஸ் கட்சியை முன்னிலைப்படுத்துவதற்கு அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும்,'' என்றார்.

1 comment:

http://rkguru.blogspot.com/ said...

இவங்களெல்லாம் ஆட்சி பிடிச்சு கொடிய நட்டுடாலும்.........