சட்ட விரோத குவாரி தொழில் மோசடியை சி.பி.ஐ., விசாரணைக்கு ஒப்படைக்க வலியுறுத்தி, கர்நாடகா சட்டசபை மற்றும் மேலவையில் காங்கிரஸ், ம.ஜ.த., எம்.எல்.ஏ.,க்கள் மூன்றாவது நாளாக நேற்றும் தர்ணாவில் ஈடுபட்டனர். நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர சபாநாயகர் போப்பய்யா முயற்சித்தும் பலன் கிடைக்கவில்லை. கடும் கூச்சல், குழப்பம் நிலவியதால், சபை நடவடிக்கைகளை ஒத்தி வைத்தார்.
கர்நாடகாவில் சட்ட விரோதமாக குவாரி தொழில் நடந்து வருவதாகவும், இதன் மூலம் 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்தன. இது குறித்து சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றன. இந்தப் பிரச்னையால், கர்நாடகா சட்டசபையில் கடந்த மூன்று நாட்களாக எந்த பணியும் நடக்கவில்லை.கடந்த திங்கட்கிழமை, செவ்வாய் கிழமை இரவில் காங்கிரஸ் உறுப்பினர்கள், சட்டசபை மற்றும் மேலவையில் படுத்து உறங்கினர்; இரவு நேர உணவையும் அங்கேயே முடித்தனர்.அதே நேரத்தில், "சட்ட விரோத குவாரி தொழிலில் ஈடுபடும் மாநில அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்' என, ஜனாதிபதி பிரதிபாவை கர்நாடக கவர்னர் பரத்வாஜ் சந்தித்து வலியுறுத்தியதும், இந்த விவகாரத்தில் எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றியது போலாகிவிட்டது.
இந்நிலையில், கர்நாடகா சட்டசபை கூட்டத்தொடர் நேற்று துவங்கும் முன்னர் சபாநாயகர் போப்பய்யா, அனைத்து கட்சித் தலைவர்களின் கூட்டத்தைக் கூட்டினார். இக்கூட்டத்தில் பங்கேற்ற சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா உட்பட சிலர், "சட்ட விரோத குவாரி தொழில் மோசடி குறித்து சி.பி.ஐ., விசாரிக்க உத்தரவிட வேண்டும்' என, சபாநாயகரே அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்று கோரினர்.முன்னாள் முதல்வர் குண்டு ராவின் ஆட்சிக் காலத்தில் விவசாயிகள் மீது நடந்த துப்பாக்கிச் சூடு, ராமகிருஷ்ண ஹெக்டே ஆட்சிக் காலத்தில் பாட்டிலிங் ஊழல், பங்காரப்பா ஆட்சிக் காலத்தில் கிளாசிக் கம்ப்யூட்டர் ஊழல், வீரப்ப மொய்லி ஆட்சிக் காலத்தில் ஜெ.எம்.எம்., ஊழல், எஸ்.எம்.கிருஷ்ணா ஆட்சிக் காலத்தில் போலி முத்திரைத்தாள் ஊழல் ஆகியவற்றை விசாரணைக்கு ஒப்படைத்தது போல, சட்ட விரோத குவாரி தொழில் மோசடி விவகாரத்தையும் விசாரிக்குமாறு முதல்வர் எடியூரப்பாவை வற்புறுத்த வேண்டும் என்றும் சபாநாயகர் போப்பய்யாவை கேட்டுக் கொண்டனர்.
முதல்வர் வேண்டுகோள்: இதன் பின், சட்டசபை துவங்கியவுடன் எதிர்க்கட்சிகள் தர்ணா போராட்டத்தை துவக்கினர். முதல்வர் எடியூரப்பா பேசுகையில், ""எந்த விஷயங்கள் குறித்தும் ஆலோசனை நடத்த தயாராக உள்ளேன். எம்.எல்.ஏ.,க்களின் செயல்பாடுகள் குறித்து சபையில் விவாதிப்போம்; அப்போது தான் உண்மை என்ன என்பது தெரியவரும். லோக் ஆயுக்தா தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்த சந்தோஷ் ஹெக்டேவின் ராஜினாமாவை வாபஸ் பெற வைக்கப்பட்டுள்ளது. சட்ட விரோத குவாரி தொழில் மோசடி குறித்து விசாரணை நடத்த, லோக் ஆயுக்தாவிற்கு அதிக அதிகாரம் அளிக்கப்படும். இது குறித்து சி.பி.ஐ., விசாரித்தால் தோல்வியாகும். பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கலாம் வாருங்கள்; இந்த தர்ணாவை கைவிடுங்கள்,'' என்றார்.
முதல்வர் எடியூரப்பா கேட்டுக் கொண்ட பின்னரும், எதிர்க்கட்சிகள் செவி சாய்க்கவில்லை. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய காங்கிரஸ் வசூலித்த நிதி துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருப்பது குறித்து விசாரணை நடத்த,சபாநாயகர் முன் நிற்க வேண்டுமென முதல்வர் எடியூரப்பா வலியுறுத்தினார். முதல்வர் எடியூரப்பாவின் இந்த பேச்சு, காங்கிரஸ் உறுப்பினர்களை ஆத்திரமடையவைத்தது. காங்கிரஸ் உறுப்பினர்கள், முதல்வருக்கு எதிராக பேசத் துவங்கினர்.
இந்நிலையில், முதல்வர் எடியூரப்பாவுக்கும், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையாவுக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது. ஒரு புறம் காங்கிரஸ், ம.ஜ.த., உறுப்பினர்கள், மற்றொரு புறம் பாரதிய ஜனதா உறுப்பினர்கள் என அனைவரும் உரத்த குரலில் வாக்குவாதத்தில் இறங்கியதால், சபையில் குழப்ப சூழ்நிலை உருவானது.சபை ஒழுங்காக நடக்கும் வகையில் இரு தரப்பினரும் ஒத்துழைப்பு அளிக்கும்படி சபாநாயகர் மீண்டும் மீண்டும் கோரிக்கை விடுத்தார். எந்த உறுப்பினரும் ஒத்துழைக்கவில்லை. இதையடுத்து, "மாநில மக்கள் உங்களை மன்னிக்கப் போவதில்லை' என்று கூறி, சட்டசபையை நாளைக்கு (இன்று) தள்ளி வைத்தார்.இதே போன்று கர்நாடகா மேலவையிலும் எந்த பணிகளும் நடக்கவில்லை. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு, வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அவைத் தலைவர் சங்கரமூர்த்தி, சபையை நாள் முழுவதற்கும் ஒத்தி வைத்தார்.
No comments:
Post a Comment