Search This Blog

Friday, July 2, 2010

பிரசாரம் செய்ய வரும்படி மோடிக்கு பீகார் பா.ஜ., அழைப்பு

பீகாரில் வரவிருக்கும் சட்டசபைத் தேர்தலுக்கான பிரசாரத்தில் பங்கேற்கும்படி, குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு பா.ஜ., அழைப்பு விடுத்துள்ளது. இதனால் கடுப்பான கூட்டணிக் கட்சியான ஐக்கிய ஜனதா தளம், "பா.ஜ., ஏன் இந்த விஷயத்தில் பிடிவாதமாக உள்ளது?' என்று கேள்வி எழுப்பியுள்ளது.

மோடி - பீகார் முதல்வர் நிதிஷ்குமார் விளம்பரப் பிரச்னை ஒரு வழியாக முடிவுக்கு வந்தாலும், பீகார் தேர்தல் பிரசாரத்தில் நரேந்திர மோடி பங்கு கொள்ளக்கூடாது என்று நிதிஷ் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில், குஜராத்தின் ஆமதாபாத் நகரில் நடந்த மாநில செயற்குழுக் கூட்டத்தில், கட்சி பொதுச் செயலரும், பீகார் மாநில பொறுப்பாளருமான ஆனந்த் குமார் பங்கேற்றார். அக்கூட்டத்தில் அவர் பேசுகையில், "பீகாருக்கு மோடி வர வேண்டும்; அங்கு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட வேண்டும். பெங்களூரு, வாரணாசி அல்லது பீகார் என இந்தியாவின் எந்த இடமானாலும் அவரை பிரசாரத்தில் பங்கு பெறுமாறு அழைக்கிறோம். அவர் எங்கள் தலைவர்' என்று கூறினார். அவரது பேச்சுக்கு, கட்சி நிர்வாகிகளிடையே பெருத்த வரவேற்பு கிடைத்தது.

இதற்கு பதிலளிக்கும் விதத்தில் பேசிய ஐக்கிய ஜனதா தளக் கட்சித் தலைவர் சிவானந்த் திவாரி கூறுகையில், "இந்தியா முழுமையும் தானே ஆள வேண்டும் என்று பா.ஜ., நினைக்கிறது. ஒரு கட்சி ஆட்சி என்பது முடிந்து போய்விட்டது; கூட்டணி தான் இன்றைய நிலை. இவ்விஷயத்தில் பா.ஜ., ஏன் பிடிவாதமாக இருக்கிறது?' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

No comments: