ஜுலை.26-
சென்னை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த குளச்சல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜெயபால் நேற்று மரணம் அடைந்தார்.
ஜெயபால் எம்.எல்.ஏ. மரணம்
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் எஸ்.ஜெயபால் (வயது 55). கடந்த ஜுன் மாதம் 2-ந் தேதி திடீரென்று அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
பின்னர் சென்னையில் உள்ள ராமச்சந்திரா மருத்துவ பல்கலைக்கழக மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அவருக்கு ரத்தப்புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்காக சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று காலை 10.30 மணிக்கு ஜெயபால் எம்.எல்.ஏ. மரணம் அடைந்தார்.
மு.க.ஸ்டாலின் அஞ்சலி
ஜெயபால் எம்.எல்.ஏ. மரணம் பற்றிய தகவல் கிடைத்ததும் துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆஸ்பத்திரிக்கு சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும், காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பீட்டர் அல்போன்ஸ், யசோதா, ஹெலன் டேவிட்சன் எம்.பி. மற்றும் காங்கிரஸ் கட்சியினர் பலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து அவரது உடல் ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றப்பட்டு அவரது சொந்த ஊரான நாகர்கோவில் அருகே உள்ள பெருவிளைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இன்று (திங்கட்கிழமை) மாலை ஜெயபால் எம்.எல்.ஏ. உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது.
வாழ்க்கை குறிப்பு
ஜெயபால் எம்.எல்.ஏ.வின் சொந்த ஊர் நாகர்கோவில் அருகே உள்ள பெருவிளை ஆகும். பெருவிளையை சேர்ந்த சிவசுப்பிரமணியம் நாடார்-தங்கம்மாள் தம்பதிகளின் மகனான ஜெயபால் எம்.எல்.ஏ.வுக்கு ஜெயசந்திரன் என்ற தம்பியும், சிவகுரு, சரோஜினி, புஷ்பவதி, ஜெயந்தி, கலைசெல்வி என்ற 5 சகோதரிகளும் உள்ளனர். மூத்த சகோதரி செல்லதங்கம் ஏற்கனவே மரணம் அடைந்து விட்டார்.
ஜெயபால் எம்.எல்.ஏ. பெருவிளையில் குடும்பத்துடன் வசித்து வந்தார். அவருக்கு புஷ்பம் என்ற மனைவியும், சிவபிரபு, சிவபிரசாந்த் என்கிற 2 மகன்களும், சிவபிரியா என்ற மகளும் உள்ளனர்.
ஜெயபால் எம்.எல்.ஏ.வின் மகன் சிவபிரபு நாகர்கோவில் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவராக உள்ளார். சென்னையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் சிவபிரபு மெக்கானிக்கல் பிரிவில் இறுதி ஆண்டு படித்து வருகிறார். சிவபிரசாந்த் சிவில் பிரிவில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். சிவபிரியா நாகர்கோவிலில் உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் எம்.சி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
1955-ம் ஆண்டு மே மாதம் 19-ந் தேதி பிறந்த ஜெயபால், தொடக்க கல்வியை பெருவிளை பள்ளியிலும், உயர்நிலை கல்வியை ஸ்காட் கிறிஸ்தவ பள்ளியிலும் படித்தார். பின்னர் பி.எஸ்சி பட்டப்படிப்பை நாகர்கோவிலில் உள்ள இந்து கல்லூரியில் முடித்தார்.
பல்வேறு பதவிகள்
மாணவர் பருவத்திலேயே காங்கிரஸ் கட்சியில் தீவிர ஈடுபாடு கொண்டிருந்தார். 1980-ம் ஆண்டு ராஜாக்கமங்கலம் ஒன்றிய காங்கிரஸ் செயலாளராக பதவியேற்று தீவிர அரசியலில் ஈடுபட்டார்.
1986-ம் ஆண்டு முதல் 1991-ம் ஆண்டு வரை பெருவிளை பஞ்சாயத்து தலைவராக பணியாற்றினார். 1996-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலராக பதவிவகித்தார். 1996-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 15 ஆண்டுகளாக கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்து வந்தார்.
தமிழ்நாடு மாநில காங்கிரஸ் (த.மா.க.) கட்சியை மூப்பனார் தொடங்கியபோது அவருடன் இணைந்து செயல்பட்டார்.
கடந்த 2006-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் முதல் முறையாக காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டார். அப்போது அவரை எதிர்த்து போட்டியிட்ட பாரதீய ஜனதா கட்சி வேட்பாளர் எம்.ஆர்.காந்தியை விட 20 ஆயிரத்து 997 வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றிபெற்றார்.
பெற்ற வாக்கு விவரம்
கடந்த 2006-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது குளச்சல் தொகுதியில் போட்டியிட்டு அவர் பெற்ற ஓட்டு விவரம் வருமாறு:-
எஸ்.ஜெயபால் (காங்கிரஸ்)- 50,258.
எம்.ஆர்.காந்தி (பாரதீய ஜனதா)- 29,261.
கே.டி.பச்சைமால் (அ.தி.மு.க.)- 20,407.
எஸ்.வெலிங்டன் (தே.மு.தி.க.)- 4,941.
சி.லிங்கபெருமாள் (சுயேச்சை)- 656.
கே.சுரேந்திரன்நாயர் (ஏ.பி.எச்.எம்)- 626.
எஸ்.என்.தர்மேந்திராகுமார் (ப.ச)- 449.
எஸ்.தாமஸ் (சுயேச்சை)- 310.
எச்.குமாரசாமி (சுயேச்சை)- 164.
கருணாகரன் (சுயேச்சை)- 142.
சி.பாலகிருஷ்ணன் (சுயேச்சை)-109.
அமைச்சர் சுரேஷ்ராஜன்
மரணமடைந்த ஜெயபால் எம்.எல்.ஏ.வின் வீட்டிற்கு சுற்றுலா மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் சுரேஷ்ராஜன் சென்று அங்கிருந்த உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார். நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் மற்றும் காங்கிரஸ் கட்சியினரும் அங்கு சென்று உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
குளச்சல் தொகுதி எம்.எல்.ஏ. ஜெயபால் மரணம் அடைந்த தகவல் நேற்று காலையில் குமரி மாவட்டம் முழுவதும் பரவியது. இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி கொடியை அரைக்கம்பங்களில் பறக்க விட்டனர்.
இடைத்தேர்தல் இல்லை
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ளதால் குளச்சல் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பு இல்லை. சமீபத்தில் கோவையில் பூந்தமல்லி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. சுதர்சனம் மாரடைப்பால் மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெயபால் எம்.எல்.ஏ. மறைவை தொடர்ந்து தமிழக சட்டமன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் பலம் 34 ஆக குறைந்தது.
No comments:
Post a Comment