நக்சல் பாதிப்பு உள்ள பகுதிகளுக்கு உணவு மற்றும் மருந்து பொருட்கள் ஆகியவற்றை விரைவாக எடுத்துச் செல்வதற்கு, ஹெலிகாப்டர்களை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் உள்ள 400 காவல் நிலையங்களை, 800 கோடி ரூபாய் செலவில் முழுமையாக நவீனமாக்கவும் மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது.
நக்சலைட்களால் பாதிப்பு ஏற்பட்டுள்ள மாநிலங்களைச் சேர்ந்த முதல்வர்களின் ஆலோசனைக் கூட்டம், மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நேற்று டில்லியில் நடைபெற்றது.பிரதமரின் ரேஸ் கோர்ஸ் இல்லத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், நக்சலைட்களின் ஆதிக்கம் உள்ள மாநிலங்களைச் சேர்ந்த முதல்வர்கள் பங்கேற்றனர். மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம், பீகார், சத்திஸ்கர், ஆந்திரா, ஒரிசா மாநிலங்களின் முதல்வர்களும், ஜார்க்கண்ட் கவர்னரும், மேற்கு வங்கத்திலிருந்து அம்மாநில சுகாதார அமைச்சரும், மத்திய, மாநில அரசுகளின் உயர் அதிகாரிகளும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.நக்சலைட்களின் நடவடிக்கைகளால் பாதிப்பு உள்ளாகிக் கொண்டிருக்கும் பகுதிகளில் உள்ள முகாம்களில், துணை ராணுவப் படையினர் மற்றும் சி.ஆர்.பி.எப்., போலீசார் உள்ளிட்ட பாதுகாப்பு படையினர் தங்கியுள்ளனர். இவர்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துகள் ஆகியவற்றை எடுத்துச் செல்வதில் தற்போது சிரமம் நிலவுகிறது.
இதை தவிர்க்கும் வகையில், உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துகள் ஆகியவற்றை பாதிப்புகள் உள்ள பகுதிகளுக்கு விரைவாக கொண்டு செல்வதற்காக, ஹெலிகாப்டர்களை பயன்படுத்துவது என இந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது .மேலும், இந்த பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் போதுமான வசதிகள் இல்லாத நிலையும் காணப்படுகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில், 800 கோடி ரூபாய் செலவில் காவல் நிலையங்களில் நவீன வசதிகள் செய்து தரப்படும். இதற்கென 400 காவல் நிலையங்கள் கண்டறியப்பட்டு தேர்வு செய்யப்படும். ஒவ்வொரு காவல் நிலையத்திலும் வசதிகள் ஏற்படுத்த தலா 2 கோடி ரூபாய் வரை செலவிடப்படும். இந்த பணிகள் இரண்டு ஆண்டுகளில் முடிவு பெறும்.
இந்த கூட்டத்தில் உள்துறை அமைச்சர் சிதம்பரம் பேசும் போது கூறியதாவது: நக்சலைட்களின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு, "ஒருங்கிணைக்கப்பட்ட தலைமைக் கட்டமைப்பு' ஏற்படுத்த மாநில அரசுகள் முன்வர வேண்டும். இந்த அமைப்புக்கு ஓய்வு பெற்ற ராணுவ தலைமை ஜெனரலை தலைவராக நியமிக்கலாம். நக்சலைட்கள் பாதிப்பு உள்ள நான்கு மாநிலங்களுக்கும் என தனி போலீஸ் ஐ.ஜி., பதவி உருவாக்குவதோடு, நக்சல் ஒடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மத்திய ரிசர்வ் போலீசாருக்கு என தனி தலைமை ஏற்படுத்தவும் மாநில அரசுகள் பரிசீலிக்க வேண்டும்.
சத்திஸ்கர், ஜார்க்கண்ட், ஒரிசா மற்றும் மே.வங்கம் ஆகிய நான்கு மாநிலங்கள் இதில் ஒருங்கிணைக்கப்படும்.ஆயிரத்து 330 கோடி ரூபாய் செலவில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருக்கும் மக்களுக்குத் தேவையான குடிநீர், சாலை வசதி, மருத்துவ வசதி உள்ளிட்டவை இந்த நிதியின் மூலம் செய்து தரப்படும். இதுதவிர, மத்திய அரசின் மூலம் 950 கோடி ரூபாய் செலவில் நக்சலைட்கள் பாதிப்பு உள்ள மாநிலங்களில் சாலை போக்குவரத்து மேம்படுத்தப்படும். பழங்குடியின மக்களின் அடிப்படை பிரச்னைகளையும், அவர்களின் தேவைகளையும் பாதுகாக்கும் வகையில் பல்வேறு திட்டங்களும் கிராம சபாக்கள் மூலம் மேற்கொள்ளப்படும்.இவ்வாறு சிதம்பரம் கூறினார். தவிரவும் அமைச்சர் சிதம்பரம், "ஆண்டுதோறும் சராசரியாக அப்பாவி மக்கள் 500 பேர் மாவோயிஸ்டுகளால் கொல்லப்படுகின்றனர் என்றும், அவர்களை "போலீஸ் இன்பார்மர்' என்று கூறி நியாயப்படுத்தும் வகையில் செயல்படுகின்றனர்' என்றார்.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட முதல்வர்களுக்குள் கருத்து வேறுபாடுகளும் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பீகார் முதல்வர் நிதிஷ்குமார், "வறுமை ஒழிப்பு மிகவும் முக்கியமானதாகும். வர்க்க பேதம் தான் அடிப்படை பிரச்னை. இதை மறைத்துவிட்டு வெறுமனே சட்டம் ஒழுங்கு பிரச்னை போல கருதி, போலீஸ் நடவடிக்கையை மேற்கொள்வது மட்டுமே சரியான தீர்வை தராது' என்றார். ஆனால், நிதிஷின் கருத்துக்கு முற்றிலும் மாறுபட்டு சத்திஸ்கர் முதல்வர் ராமன் சிங்கின் பேச்சு அமைந்திருந்தது. அவர் பேசும் போது, "தீவிரவாதத்துக்கும் நக்சலைட்களுக்கும் பெரிய வித்தியாசம் எல்லாம் கிடையாது. தீவிரவாதத்தை ஒடுக்குவதற்கு எப்படியெல்லாம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமோ அவற்றை நக்சலைட்கள் ஒழிப்பிற்கும் பயன்படுத்த வேண்டும். தீவிரவாதத்தை எப்படி அரசாங்கம் கையாள்கிறதோ, என்ன மாதிரியான அணுகுமுறை மேற்கொள்கிறதோ அதை அப்படியே நக்சலைட் பிரச்னைக்கும் மேற்கொண்டால் தான் சரியாக இருக்கும்.நக்சலைட்களுடன் சமாதான பேச்சு வார்த்தை பேசக்கூடாது. நக்சலைட்கள் ஆயுதங்களை கீழே போடவே மாட்டார்கள். அவர்கள் இருக்கும் வரை, அரசின் வளர்ச்சித் திட்டங்களை அடித்தட்டு மக்களிடம் கொண்டு போய் சேர்க்க விடமாட்டார்கள்' என்றார்.
No comments:
Post a Comment