"விலைவாசி உயர்வு தொடர்பாக ஒத்திவைப்பு தீர்மானத்திற்கு அனுமதி தர முடியாது' என, லோக்சபா சபாநாயகர் மீராகுமார் நிராகரித்ததால், ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் நேற்று அமளியில் இறங்கின. இதனால், பார்லிமென்டின் அனைத்து நடவடிக்கைகளும் இரண்டாவது நாளாக முடங்கின.
விலைவாசி உயர்வு குறித்து விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர வேண்டும் என, எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றன. அதன்படி விவாதம் நடத்தினால், முடிவில் ஓட்டெடுப்பு நடத்த வேண்டும். இதற்கு அரசு தயாரில்லை. இதனால், நேற்று இரண்டாவது நாளாக சபை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. லோக்சபா நேற்று கூடியதும் கேள்வி நேரத்தை எடுத்துக் கொள்ள சபாநாயகர் மீராகுமார் முற்பட்டார். எதிர்க்கட்சிகள் விடவில்லை. இதனால், வேறு வழியின்றி, "ஒத்திவைப்பு தீர்மானம் ஏன் வேண்டும்' என, வலியுறுத்தி பேச எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பு அளித்தார்.
முதலில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ்," சமீபத்தில் நடத்திருக்க வேண்டும். மக்களை பாதிக்கும் வகையில் அவசர முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னையாக இருக்க வேண்டும். இந்த இரண்டும்தான் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர தேவை. இந்த இரண்டு காரணங்களுமே இப்போது இருக்கின்றன. 2004ம் ஆண்டிலிருந்து விஷம் போல விலைவாசி ஏறுகிறது. எனவே ஒத்திவைப்பு தீர்மானம் என்பது மிகவும் பொருத்தமானது,'' என்றார்.
முலாயம்சிங் பேசும்போது,"" 90 சதவீத மக்கள் அவதிப்படுகின்றனர். 10 சதவீதம் பேர் விலைவாசி உயர்வால் பாதிக்கப்படாதவர்கள். இவர்களுக்காக மட்டுமே இந்த அரசு இருக்கிறது'' என்றார்.
பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த தாரசிங் சவுகான் பேசும்போது, ""ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்தே ஆக வேண்டும். விலைவாசி பிரச்னையை அரசு மூடி மறைத்து விட முடியாது,'' என்றார்.
சரத்யாதவ் பேசும்போது, ""பருவமழை நன்றாக இருக்கும். டிசம்பரில் விலைவாசி குறையும் என, பிரதமர் பேசுகிறார். பருவமழையை மட்டும் நம்பி நடக்கும் அரசாங்கமும், அதன் பிரதமரும் இந்த நாட்டிற்கு தேவைதானா என்று புரியவில்லை,'' என்றார்.
பாசுதேவ்ஆச்சார்யா பேசும்போது,""ஏற்கனவே 1971, 1973, 1986, 1994ம் ஆண்டுகளில் கொண்ட வரப்பட்ட ஒத்திவைப்பு தீர்மானத்திற்கு சபாநாயகர் அனுமதி வழங்கியுள்ளார். இடதுசாரிகளின் தயவால் நடந்த கடந்த ஆட்சியில், சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை உயர்த்த எவ்வளவோ முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஆனால், முடியவில்லை. இப்போது இடதுசாரிகளின் கடிவாளம் இல்லை என்பதால் இஷ்டம்போல் விலையை ஏற்றுகின்றனர்,'' என்றார்.
குருதாஸ் தாஸ்குப்தா பேசும் போது,""சர்வதேச சந்தை நிலவரப்படி பெட்ரோல், டீசல் விலை இனி இருக்கும். இது மிகவும் ஆபத்து. சர்வதேச சந்தையில் விலையை நிர்ணயிப்பவர்கள் புரோக்கர்கள். இவர்களுக்கு இந்திய சாமானிய மக்கள் இனி அடிமையாக வேண்டும்,'' என்றார்.
திரிணமுல் காங்கிரசைச் சேர்ந்த சுதிப் பண்டோபாத்யா பேசும்போது, ""விலைவாசி உயர்வு கவலையளிக்கக் கூடிய விஷயமே. இதை சபையில் விவாதிக்க வேண்டும். ஆனாலும், இதற்காக ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர வேண்டுமென்ற அவசியம் இல்லை. ஓட்டெடுப்பு இல்லாத வேறு பிரிவுகளின்கீழ் இந்த விவாதத்தை நடத்தினால் நல்லது'' என்றார்.
தி.மு.க.,வைச் சேர்ந்த டி.ஆர்.பாலு,""எதிர்க்கட்சிகளுக்கு துணிச்சல் இருக்குமேயானால் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரலாம். அதை விட்டுவிட்டு ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்து அரசாங்கத்திற்கு பூச்சாண்டி காட்டுவது ஏன்? விலைவாசி பிரச்னைக்காக ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வருவதை தி.மு.க., எதிர்க்கிறது,'' என்றார்.
அரசு தரப்பில், பிரணாப் முகர்ஜி பேசும்போது,""1956 மே மாதம் 30ல் அனந்த சயன அய்யங்காரும், 1971ல் தில்லானும் சபாநாயகர்களாக இருந்தபோது ஒத்திவைப்பு தீர்மானம் குறித்து பின்வருமாறு தீர்ப்பு கூறியுள்னர். அதில், "அரசியல் சட்டத்தின் கீழ் தனது பொறுப்பையும், கடமையையும் ஒரு அரசாங்கம் செய்யத் தவறாத வரை, அந்த அரசிற்கு எதிராக அவையில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவரத் தேவையில்லை' என்று கூறியுள்ளனர். எங்களுக்கு ஒன்றும் விலைகளை உயர்த்த ஆசை இல்லை. விலை உயர்வுக்கு மாநில அரசுகள் போடும் அதிக வரிகளும்கூட ஒரு காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது,'' என்றார்.
இதையடுத்து, சபாநாயகர் மீராகுமார், ""1971ல் சபாநாயகர் தில்லான் அளித்த தீர்ப்பில், அரசியல் சட்டப்படி அரசு தனது கடமையை ஆற்ற தவறும் போதுதான் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர வேண்டும். இல்லையெனில், அதற்கு அவசியமில்லை என்று கூறியுள்ளார். விலைவாசி உயர்வு பிரச்னையில் அரசு தனது கடமையை ஆற்றிக் கொண்டு இருப்பதாகவே கருதுகிறேன். எனவே ஒத்திவைப்பு தீர்மானம் தேவையில்லை,'' என்றார்.
இதை ஏற்காத எதிர்க்கட்சி உறுப்பினர்கள், சபையின் மையத்திற்கு சென்று அமளியில் இறங்கவே, சபை ஒத்திவைக்கப்பட்டது. சபாநாயகரின் தீர்ப்பை ஏற்க மறுத்து, எதிர்ப்பு தெரிவிப்பது பார்லிமென்ட் வரலாற்றில் இதுவே முதல்முறை.
ராஜ்யசபாவிலும் ரகளை : ஒத்திவைப்பு தீர்மானத்தின் கீழ் விலைவாசி பிரச்னை குறித்து விவாதம் நடத்த வேண்டும் என, ராஜ்யசபாவிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் இறங்கின. இதனால், சபை இரு முறை ஒத்திவைக்கப்பட்டது.ராஜ்யசபா நேற்று கூடியதும், பா.ஜ.,வைச் சேர்ந்த நந்தகுமார் சாய், புதிய எம்.பி.,யாக பதவியேற்றார். இது முடிந்ததுமே, பா.ஜ., உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுந்து, "கேள்வி நேரத்தை ரத்து செய்ய வேண்டும். ஒத்திவைப்பு தீர்மானத்திற்கு என்ன பதில்' என்று கேட்டு அமளியில் இறங்கினர். இதனால், சபையில் குழப்பம் ஏற்பட்டது.எதிர்க்கட்சித் தலைவர் அருண்ஜெட்லி பேசும்படி, சபைத் தலைவர் அன்சாரி அனுமதித்தார். ஆனால், அவர் பேசுவது எதிர்க்கட்சிகளின் கூச்சல் குழப்பத்தினால் தடை ஏற்பட்டது. இதையடுத்து சபை ஒத்திவைக்கப்பட்டது. மதியம் 12 மணிக்கு மீண்டும் கூடியபோதும் இதே நிலை காணப்படவே, அப்போது துணைத் தலைவர் ரகுமான்கான், நாள் முழுவதற்கும் சபையை ஒத்திவைப்பதாக அறிவித்தார்.
கொறடா உத்தரவை மீறிய சோனியா, ராகுல் : புதுடில்லி: விலைவாசி உயர்வு தொடர்பாக லோக்சபாவில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் தீவிரமாக இருந்ததால், காங்கிரஸ் எம்.பி.,க்கள் அனைவரும் நேற்று தவறாமல் பார்லிமென்டிற்கு வர வேண்டும் என, அந்தக் கட்சி சார்பில் கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இருந்தும், சோனியாவும், ராகுலும் நேற்று சபைக்கு வரவில்லை.
இதுபற்றி காங்கிரஸ் தகவல் தொடர்பாளர் மணீஷ் திவாரியிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பிய போது அவர் கூறியதாவது:கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டும் சோனியாவும், ராகுலும் பார்லிமென்டிற்கு வரவில்லை எனில், சில தவிர்க்க முடியாத காரணங்கள் இருந்திருக்கலாம். அவர்கள் இருவருக்கும் கட்சி மற்றும் அமைப்பு ரீதியான பொறுப்புகள் நிறைய உள்ளன. முன்பே திட்டமிடப்பட்ட சில பணிகள் இருந்துள்ளதால், அவர்கள் சபைக்கு வரவில்லை. இல்லையெனில், கட்டாயம் சபைக்கு வந்திருப்பர்.இவ்வாறு திவாரி கூறினார்.
No comments:
Post a Comment