தனது பணிச்சுமையை குறைக்கும்படி அமைச்சர் சரத் பவார் கூறியதை அடுத்து, மத்திய அமைச்சரவையில் விரைவில் மாற்றம் செய்வது குறித்து பிரதமர் மன்மோகன் சிங் தீவிரமாக ஆலோசித்து வருகிறார். முக்கிய பதவியை இழப்பதால், தனது மகளுக்கு அமைச்சர் பதவி வேண்டும் என்றும் அவர் கேட்டுள்ளார். இலாகா மாற்ற வேண்டும் என வாசன் வற்புறுத்தி வருவதால், அவரது இலாகாவையும், எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருவதால், ராஜாவின் இலாகாவையும் மாற்றுவது குறித்து மன்மோகன் சிங்கும், சோனியாவும் ஆலோசனை செய்து வருகின்றனர். மாற்றம் குறித்த அறிவிப்பு இன்னும் ஓரிரு நாளில் அறிவிக்கப்படும்.
மத்திய அமைச்சரவையில் மாற்றம் வரும் என்று பல நாட்களாக பேச்சு இருந்து வந்தது. தேர்தல்கள், பிரதமரின் வெளிநாட்டு சுற்றுப்பயணம் என பல்வேறு காரணங்களால் இது தள்ளிப்போய்க் கொண்டே இருந்தது. மத்திய உணவு அமைச்சர் சரத் பவார், சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவர் பொறுப்பை ஏற்றார். இதனால் எழுந்துள்ள கடும் சர்ச்சையை அடுத்து நேற்று முன்தினம் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேசினார். அப்போது தனது பணிச்சுமையை குறைக்கும்படி கேட்டுக் கொண்டார். அதே நேரத்தில், தன் மகளுக்கு மத்திய அமைச்சர் பதவி வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனால், அமைச்சரவை மாற்றம் என்பதை தள்ளிப்போடாமல் விரைந்து முடிக்க வேண்டுமென பிரதமர் மன்மோகன் சிங் விரும்புகிறார். ஆனால், அவ்வாறு செய்யப்படும் அமைச்சரவை மாற்றத்தை சிறிய அளவில் செய்யலாமா அல்லது பெரிய அளவில் செய்துவிடலாமா என்றும் அவர் யோசித்து வருவதாக தெரிகிறது. காரணம், பார்லிமென்டின் மழைக்கால கூட்டத்தொடருக்கு இன்றும் இரண்டு வாரங்களே உள்ளன.அமைச்சரவையில் உள்ள சில அமைச்சர்கள் மீது காங்கிரசுக்கும், சில அமைச்சர்கள் மீது பிரதமருக்கும் அதிருப்தி நிலவுகிறது. எனவே அமைச்சரவை மாற்றம் என்பது தவிர்க்க இயலாத ஒன்றாக ஆகிவிட்டது.
மத்திய அரசுக்கு தனிப்பெரும்பான்மைக்கு 273 எம்.பி.,க்கள் தேவைப்படும் பட்சத்தில் 269 பேர் மட்டுமே தற்போது ஆதரிக்கின்றனர். இதை பெரும்பான்மை ஆக்குவதற்கு அஜித் சிங்கிடம், காங்கிரஸ் பேசி வருகிறது. தற்போது ஐந்து எம்.பி.,க்களைக் கொண்ட அந்த கட்சியை காங்கிரசோடு இணைப்பதில் அஜித் சிங்கிற்கும், அவரது மகனுக்கும் கருத்தொற்றுமை ஏற்படவில்லை. அஜித் சிங், காங்கிரசுக்கு வரும்பட்சத்தில் அவருக்கு உணவு அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்று தெரிகிறது.
விரைவில் சட்டசபை தேர்தல்கள் நடைபெறவுள்ள மாநிலங்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையிலும் யோசிக்கப்படுகிறது. அந்த வகையில் மேற்குவங்கத்தை சேர்ந்தவரும், திரிணமுல் காங்கிரசை சேர்ந்தவருமான சுதிப் பண்டோபாத்யாவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்று தெரிகிறது. தவிர, காங்கிரசை சேர்ந்த அதீர் சவுத்ரி என்பவர் பெயரும் அமைச்சர் பதவிக்கு அடிபடுகிறது.உத்தர பிரதேசத்திற்கு கேபினட் அந்தஸ்த்தில் அமைச்சர் பதவி அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அங்கிருந்து இணையமைச்சராக ஏற்கனவே உள்ள ஜெய்வாலை, கேபினட் அந்தஸ்த்துக்கு உயர்த்தலாம் என்று தெரிகிறது. குர்மி இனத்தைச் சேர்ந்த பென்னி பிரசாத் மற்றும் நடிகர் ராஜ் பாப்பர் ஆகியோரது பெயர்களும் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.
பீகாரில், வரும் அக்டோபரில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. அங்குள்ள முஸ்லிம்களின் ஆதரவைப் பெறும்நோக்கில் அந்த மாநிலத்திலிருந்து தேர்வாகியுள்ள முஸ்லிம் எம்.பி., ஒருவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று தெரிகிறது. சில முக்கிய துறைகளின் அமைச்சர்கள் மீது பிரதமரும், சோனியாவும் பெரிய அளவில் அதிருப்தியில் உள்ளனர். இதன் காரணமாக அமைச்சரவையில் பெரிய அளவில் மாற்றங்கள் செய்யப்பட்டால், முக்கிய அமைச்சர்களின் இலாகாக்களும் மாற்றம் செய்யப்பட வாய்ப்புள்ளது.
அந்த வகையில் கபில் சிபல் மீது கடும் அதிருப்தி நிலவுகிறது. கேந்திரிய வித்யாலயாக்களில் எம்.பி.,க்களுக்கான கோட்டாவை ரத்து செய்து பின், காங்கிரஸ் தலைமை தலையிட நேர்ந்தது. வெளிநாட்டு பல்கலைக்கழகங்களை கொண்டு வருவது உள்ளிட்ட விஷயங்களில் மிகவும் அவசரப்பட்டு முடிவெடுக்கிறார் என்ற விமர்சனம் இவர் மீது உள்ளது. எனவே இவர் வர்த்தகத் துறைக்கு மாற்றப்பட்டு, இப்போது வர்த்தக அமைச்சராக உள்ள ஆனந்த் சர்மாவை வெளியுறவுத் துறைக்கு நியமிக்க வாய்ப்புள்ளது. எஸ்.எம்.கிருஷ்ணாவின் செயல்பாடுகள் மீது பிரதமருக்கு திருப்தி இல்லை என்பதால் வெளியுறவுத்துறை பொறுப்பிலிருந்து எடுத்துவிட்டு அவரை சட்டத்துறை அமைச்சராக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சட்ட அமைச்சராக உள்ள வீரப்ப மொய்லி, மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு அமைச்சராக்கபடுவார்.
தமிழக அமைச்சர்களை பொறுத்தவரை, பலநாட்களாக வாசனே கேட்டுக் கொண்டு வருவதால் அவரை பணிச்சுமை குறைவாக உள்ள இலாகாவுக்கு மாற்றம் செய்யப்படவும் வாய்ப்பு இருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ராஜா மீது எதிர்க்கட்சிகள் தொடர்ந்து புகார்களை கூறிவருவதால் அவரது இலாகா மாற்றம் குறித்து தி.மு.க., மேலிடத்திடம் ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக தெரிகிறது.
No comments:
Post a Comment