நெய்வேலி:என்.எல்.சி., தொழிலாளர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டம் நேற்று இரண்டாவது நாளாக தொடர்ந்தது.என்.எல்.சி.,யில் பணிபுரியும் 14 ஆயிரத்து 234 தொழிலாளர் மற்றும் ஊழியர்களில் 30 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் நேற்று முன்தினம் துவங்கிய காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எஸ்.எம்.இ., ஆபரேட்டர்கள், சூப்பர்வைசர்கள், இன்ஜினியர்கள், அதிகாரிகள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை புறக்கணித்து பணிக்கு சென்று வருகின்றனர்.
இதனால், என்.எல்.சி., சுரங்க பகுதிகள் மற்றும் அனல்மின் நிலைய பகுதிகளில் குறிப்பாக இரண்டாம் சுரங்கம், இரண்டாம் அனல் மின்நிலைய பகுதிகளில் தொடர்ந்து உற்பத்தி நடந்து வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் சென்னையில் மண்டல தொழிலாளர் நல கமிஷனர் முன்னிலையில் நடக்க இருந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில் என்.எல்.சி., நிர்வாகம் மட்டுமே கலந்து கொண்டது. அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கத்தினர் புறக்கணித்ததால் மண்டல தொழிலாளர் நல கமிஷனர் ஜகன்நாதராவ் நேற்று நெய்வேலிக்கே நேரடியாக வந்து முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தும் முயற்சியை மேற்கொண்டார்.முத்தரப்பு பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை.
இதன் தொடர்ச்சியாக, மத்திய அமைச்சர் ராஜா, மத்திய நிலக்கரி துறை அமைச்சர் ஜெய்ஸ்வாலை சந்தித்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருமாறு கேட்டுக் கொண்டார். இதையடுத்து, இன்னும் இரண்டு நாட்களில் என்.எல்.சி., தொழிலாளர்களின் ஊதிய மாற்று ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை முடிவுக்கு கொண்டு வரப்படும் என, மத்திய நிலக்கரித் துறை அமைச்சர் ஸ்ரீ பிரகாஷ் ஜெய்ஸ்வால் உறுதியளித்துள்ளார்.
போலீஸ் உஷார்:என்.எல்.சி., தொழிலாளர்களின் போராட்டம் காரணமாக அங்கு முகாமிட்டுள்ள டி.ஐ.ஜி., மாசானமுத்து கூறுகையில்,"வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் பணிக்கு செல்பவர்களை மிரட்டவோ, தடுக்கவோ கூடாது. அசம்பாவித சம்பவங்களில் யாரும் ஈடுபடக்கூடாது. இதையும் மீறி சட்டவிரோத செயல்களில் யாராவது ஈடுபட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
No comments:
Post a Comment