Search This Blog

Thursday, July 1, 2010

பாட்டாளி மக்கள் கட்சி - லாலு பிரசாத் யாதவ்

சரியான ஒருங்கிணைப்பு இல்லாததால் மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு விரைவில் கவிழும் என்று லாலு பிரசாத் யாதவ் கூறினார்.

பொதுக்கூட்டம்

மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சென்னை அடையாறு தொலைபேசி இணைப்பகம் அருகே நேற்று இரவு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு பா.ம.க. தொழிற்சங்க மாநில தலைவர் ஏ.கே.மூர்த்தி தலைமை தாங்கினார். பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி முன்னிலைவகித்தார்.

கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

சாதிவாரி கணக்கெடுப்பு பற்றிய பிரச்சினையில் மந்திரி சபை குழு கூட்டி நல்ல முடிவை அறிவிப்பார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் சரத்பவார், மம்தா ஆகியோர் அந்த கூட்டத்திற்கு வராததால் அந்த கூட்டம் 2 நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

என்ன கஷ்டம்?

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் முடிவை அறிவிப்பதில் என்ன கஷ்டம். வெள்ளைக்காரன் காலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது, இப்போது சாதிவாரி கணக்கெடுப்பு ஏன் நடத்தவில்லை. இப்போது மறைத்தாலும் ஒவ்வொரு சாதியிலும் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்பது ஒரு காலத்தில் வெளிச்சத்துக்கு வந்துதானே தீரும்.

சேர்ந்து செயல்படுவோம்

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி இந்தியா முழுவதும் ஒரு பெரிய இயக்கத்தை திரட்ட வேண்டும். இதற்காக 3 மாதத்திற்கு ஒரு தடவை லாலு தமிழ்நாட்டுக்கு வரவேண்டும். நாம் இரண்டு பேரும் சேர்ந்து செயல்படுவோம். இந்திய அளவில் இந்த ஓ.பி.சி உயர் கல்வியில் கொண்டுவர நான் என்ன பாடுபட்டேன். எவ்வளவு நாட்கள்தான் ஏமாற்றுவீர்கள். சமுதாய புரட்சி கட்டாயம் வரவேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பு சாதாரண பிரச்சினை. ஆகவே நல்ல முடிவு எடுங்கள். தாழ்தப்பட மக்களும், பிற்படுத்தப்பட்ட மக்களும் ஒன்றாக சேர்ந்தால்தான் இவர்களை எதிர்க்க முடியும்.

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் பேசினார்.

கூட்டத்தில் ராஷ்டிரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் பேசியதாவது:-

முன்னோடி நிலை

சாதிவாரியாக கணக்கெடுப்பு குறித்து எந்த முடிவும் தெரிவிக்காமல் உள்துறை மந்திரி ப.சிதம்பரம் நழுவி சென்றுவிடுகிறார். பார்லிமெண்டுக்கு வந்த பிரதமர் மன்மோகன்சிங் சாதிவாரியான கணக்கெடுப்பை நாங்கள் மறுக்கவில்லை, அது முன்னோடி நிலையில் உள்ளது என்கிறார்.

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது குறித்து மழைக்கால கூட்டத்தொடருக்கு முன் ஒரு முடிவுக்கு வர வேண்டும்.

காடுகளில் வாழும் விலங்குகளைக்கூட சிங்கம், புலி, மான் என்று பிரித்து கணக்கெடுக்கும்போது மனிதர்கள் என்ன பாவம் செய்தார்கள். அவர்களை ஏன்? சாதிவாரியாக கணக்கெடுக்க யோசிக்கிறார்கள்.

சாதிவாரி கணக்கெடுப்பு

1931-ம் ஆண்டுக்கு பிறகு இந்தியாவில் சாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. மண்டல் கமிஷனுக்கு பிறகு, ஒரு சமயம் தோராயமாக சாதிவாரி கணக்கெடுத்து கூறினார்கள்.

நாட்டில் சாதிகளே இல்லையா?. நான் ஒரு யாதவன். என்னைப்போன்று பலர் சாதியை சொல்கிறார்கள். சாதி எப்போது ஒழிந்தது?. எங்கே சாதி இல்லை?. அதை கணக்கெடுக்க உங்கள் மூலம் அறைகூவல் விடுக்கிறேன்.

சாதிவாரியாக கணக்கெடுக்க வேண்டும் என்று நாங்கள் சொல்லும்போது, மேல் தட்டில் உள்ளவர்கள், அறிவாளிகள், ஏற்கனவே மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்கிவிட்டதாக திசை திருப்புகிறார்கள்.

விலைவாசி உயர்வு

தற்போது, பெட்ரோல், டீசல், கியாஸ், மண்எண்ணெய், உரம் என்று அனைத்து அத்தியாவசிய பொருட்களும் விலை உயர்ந்துள்ளது. ஆனால், விலைவாசி உயர்வுக்கு அரசு பொறுப்பேற்க மறுக்கிறது. பெட்ரோலிய கார்பரேஷன்களுக்கு தாரைவார்த்துள்ளனர்.

அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வால் சாதாரண விவசாய மக்கள் பாதிக்கப்படுவார்கள். பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வை கண்டித்து பா.ஜ.க. கூட்டணி கட்சிகள் 5-ந் தேதி பந்த் அறிவித்துள்ளது. இதில், நாங்கள், பா.ம.க. கலந்துகொள்ள மாட்டோம்.

2-ம் முறையாக பதவி ஏற்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் சரியாக ஒருங்கிணைப்பு இல்லை. யாரும் பிரச்சினையில் தீவிரமாக கவனம் செலுத்துவதில்லை. தற்போதைய அரசு 5 ஆண்டு காலம் நீடிக்காது. விரைவில் கவிழ்ந்துவிடும்.

இவ்வாறு லாலு பிரசாத் யாதவ் கூறினார்.

முன்னதாக முன்னாள் மத்திய மந்திரிகள் டாக்டர் அன்புமணி ராமதாஸ், இரா.வேலு, எம்.எல்.ஏ.க்கள் திருக்கச்சூர் ஆறுமுகம், வேல்முருகன், சக்தி கமலாம்பாள் உள்பட பலர் பேசினார்கள். கூட்டத்தில், மண்டல குழு தலைவர் மு.ஜெயராமன், அம்பத்தூர் நகரசபை தலைவர் கே.என்.சேகர், வழக்கறிஞர் சமூகநீதி பேரவை தலைவர் பாலு உள்பட பலர் கலந்துகொண்டனர்.

லாலுவின் ``கோவிந்தா... கோவிந்தா..''

லாலு பிரசாத் யாதவ் மேடையில் பேசும்போது, பல நேரம் நகைச்சுவையாக பேசினார். ஒரு சமயம், ``சிலர் என்னிடம் வந்து 4 எம்.பி.க்களை வைத்துக்கொண்டு என்ன செய்ய போகிறீர்கள் என்கிறார்கள். சுடுகாட்டுக்கு உடலை எடுத்து செல்லக்கூட 4 பேர்தான் உதவுவார்கள். இந்த 4 பேர்களை வைத்தே உங்களை அனுப்பி விடுவேன். கோவிந்தா.. கோவிந்தா...'' என்று நகைச்சுவையாக பேசினார். லாலுவின் பேச்சைக்கேட்டு கூட்டத்தில் இருந்தவர்கள் கை தட்டி சிரித்தனர்.

No comments: