Search This Blog
Wednesday, July 14, 2010
விலைவாசியை கட்டுப்படுத்தும் கடமை : சிதம்பரம் ஒப்புதல்
விலைவாசியை கட்டுப்படுத்த வேண்டிய கடமை எங்களுக்கு இருக்கிறது. கட்டுப்படுத்த முடிந்த பொருட்களின் விலை உயர்வை நிச்சயம் கட்டுப்படுத்துவோம்,'' என மத்திய அமைச்சர் சிதம்பரம் பேசினார்.
மத்திய அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் திருப்பூரில் நேற்று நடந்தது. காங்., மாநில தலைவர் தங்கபாலு தலைமை வகித்தார்.
கடந்த 2004ல் நடந்த லோக்சபா தேர்தல் முக்கியமான ஒன்று. அதற்கு முந்தைய எட்டு ஆண்டுகள் காங்., ஆட்சிப் பொறுப்பில் இல்லை. அந்த எட்டு ஆண்டுகளில் பொறுப்பேற்ற அரசுகளின் நிலையான சாதனை ஒன்றைக்கூட சொல்ல முடியாது. குறிப்பாக, ஆறு ஆண்டுகள் ஆண்ட பா.ஜ.,வின் சாதனை என்ன? பொருளாதார வீழ்ச்சிதான் ஏற்பட்டது. ஐந்தாண்டுகளின் சராசரி பொருளாதார வளர்ச்சி 5.5 விகிதம். நிதிப்பற்றாக்குறை ஏற்பட்டது. வெளிநாடுகளிலும், உலக வங்கியிலும் கடன் வாங்கினோம். வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களிடமும் கடன் வாங்கினோம். 2004 தேர்தலில் ஏற்பட்ட திருப்பு முனைக்கு தமிழகம் முக்கிய காரணம். 40க்கு 40 சீட்களை தந்து உதவியது. காங்., தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பதவியேற்றதும் எண்ணற்ற சாதனைகள் செய்துள்ளோம்.
நான்கு கோடி விவசாயிகளுக்கு 67 ஆயிரம் கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதை குறை சொல்லும் பா.ஜ., ஆட்சியில் இரும்பு ஆலை, மோட்டார் வாகன உற்பத்தி, சர்க்கரை ஆலை போன்ற பெருமுதலாளிகளின் கடன்களைத்தான் தள்ளுபடி செய்தனர். கல்விக்கடன் திட்டத்தை காங்., உறுதிப்படுத்தியது. கடந்த மார்ச் இறுதி வரை 19 லட்சத்து 41 ஆயிரத்து 885 மாணவர்களுக்கு 35 ஆயிரத்து 946 கோடி ரூபாய் கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் ஐந்து லட்சத்து 63 ஆயிரத்து 429 மாணவர்களுக்கு 7,189 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. மதிய உணவுத்திட்டத்தில் நாடு முழுவதும் தினமும் 13 கோடி குழந்தைகள் பயன்பெறுகின்றனர். காங்., பிரதமர்கள் தன்னலமற்று செயல்பட்டு வந்துள்ளனர்.
பயிர்க் காப்பீட்டு திட்டம், தனிமனித ஓய்வூதிய திட்டம், முதியோர் ஓய்வூதிய திட்டம், வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டம் என எண்ணற்ற மக்கள் நலன் பயக்கும் திட்டங்களைத் தந்துள்ளோம். 40 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் வேலை உறுதித் திட்டம் மக்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆரம்பக் கல்வி எல்லாருக்கும் உறுதியாக செயல்படுத்தி உள்ளோம். கல்விக்கு உறுதி, வேலைக்கு உறுதி போலவே உணவுக்கு உறுதித் திட்டமும் விரைவில் அமல்படுத்தப்படும். வறுமைக் கோட்டுக்கு கீழ் வசிப்பவர்களுக்கு மாதம் 25 கிலோ அரிசி அல்லது கோதுமை மூன்று ரூபாய்க்கு வழங்கப்படும்.
இம்மூன்றும் வெறும் திட்டமல்ல; சட்டமாகவே கொண்டு வரப்பட்டுள்ளன. எனவே, நிரந்தரமாக இருக்கும். 2004-09ம் ஆண்டுகளில் சராசரி பொருளாதார வளர்ச்சி ஒன்பது சதவீதம். உலக பொருளாதார மந்த நிலை ஏற்பட்ட கடைசி ஆண்டிலும் 6.7 சதவீத வளர்ச்சியை எட்டினோம். 2009-10ம் ஆண்டில் அமெரிக்கா இரண்டு சதவீதம், இங்கிலாந்து ஒரு சதவீதம், கிழக்கு ஆசிய நாடுகள் மூன்று சதவீதம் வளர்ச்சியை மட்டுமே எட்டியுள்ளன. ஆனால், இந்தியா 7.4 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது. நடப்பாண்டில் 8.5 சதவீத வளர்ச்சியை நாம் எதிர்பார்க்கிறோம். சர்வதேச பொருளாதார மையம் இந்தியா 9.4 சதவீத வளர்ச்சியை எட்டும் என கணித்துள்ளது. தொடர்ச்சியான பொருளாதார வளர்ச்சியால் பணப்புழக்கம் அதிகரித்து வருகிறது. ஏற்றுமதி, இறக்குமதி, உற்பத்தி அதிகரித்து சம்பளமும் உயர்கிறது. வரும் 15 ஆண்டுகளுக்கு சராசரி வளர்ச்சி ஒன்பது சதவீதத்தை எட்டி விட்டால், வறுமை ஒழிந்து விடும்.
பொருளாதார வளர்ச்சியைப் போலவே, சில சங்கடங்களும் இருக்கத்தான் செய்யும். விலைவாசி உயர்ந்துள்ளதாக கூறுகின்றனர்; ஏற்றுக்கொள்கிறோம். நாம் உலகின் மிகச்சிறந்த பொருளாதார மேதையை பிரதமராகப் பெற்றுள்ளோம். ஜி-20 மாநாட்டில், "மன்மோகன் சிங் பேசினால் உலகம் உற்றுக் கேட்கும்' என்ற ஒபாமாவின் வார்த்தைகளை யாரும் மறுத்துவிட முடியாது. எல்லா நாடுகளிலும் விலைவாசி உயர்ந்துள்ளது. விவசாயத்தை புறக்கணிக்க முடியுமா. நெல் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. கோதுமை, கரும்பு, பருப்பு, பால் என அனைத்து வேளாண் பொருட்களின் கொள்முதல் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், விலைவாசியும் உயரத்தான் செய்யும். கொள்முதல் விலையை உயர்த்தக் கூடாது என்று கூற முடியுமா.
கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்தித் தான் ஆக வேண்டும். பேரல் 25 டாலருக்கு விற்றாலும், 140 டாலருக்கு விற்றாலும் விலையை ஒரே மாதிரியாக வைத்திருக்க முடியாது. சிலவற்றின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த முடியாது. கட்டுப்படுத்த முடியாதவற்றை ஈடுகட்டும் விதத்தில், பஞ்சப்படி, சம்பளம், அடிப்படைக்கூலி போன்றவற்றை உயர்த்துவோம். அப்பொருட்களின் மீதான மானியத்தை உயர்த்தி, மக்களின் மீதான சுமையைக் குறைப்போம். மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்திருக்கிறது என்பதும் உண்மை. விலைவாசியைக் கட்டுப்படுத்த வேண்டிய கடமை எங்களுக்கும் இருக்கிறது. கட்டுப்படுத்த முடிந்த பொருட்களின் விலை உயர்வை நிச்சயம் கட்டுப்படுத்துவோம். இவ்வாறு சிதம்பரம் பேசினார். முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன், அகில இந்திய காங்., உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் உட்பட பலர் பங்கேற்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment