மும்பை தாக்குதலுக்குப் பின், முதன்முறையாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, நேற்று பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்துக்குச் சென்றார். மூன்று நாள் அரசு முறைப் பயணத்தில் அவர், பாகிஸ்தான் அதிபர் மற்றும் பிரதமரையும் சந்திக்க உள்ளார்.மும்பை தாக்குதலுக்குப் பின், இந்திய அமைச்சர்கள் பாகிஸ்தான் செல்வதைத் தவிர்த்தனர். இரு தரப்பு பேச்சு வார்த்தைகளும் தடைபட்டன.
இந்நிலையில், பூடான் தலைநகர் திம்புவில் நடந்த, "சார்க்' மாநாட்டில் சந்தித்த இரு நாட்டின் பிரதமர்களும், இருதரப்பிலும் நம்பகத்தன்மை வலுப்படவும், உறவுகளில் நம்பிக்கை மேம்படவுமான பேச்சு வார்த்தை துவங்கப்பட வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டினர்.இதையடுத்து, நேற்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் கிருஷ்ணா, பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்துக்குச் சென்றார். மூன்று நாள் அரசு முறைப் பயணத்தில் அவர், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷியுடன் பேச்சு வார்த்தை நடத்துகிறார். மேலும் பாக்., அதிபர் சர்தாரி, பிரதமர் ரசா கிலானி ஆகியோரை சந்திக்கிறார்.
இதுகுறித்து அமைச்சர் கிருஷ்ணா கூறுகையில், "இரு தரப்பிலான அமைதி, நட்புணர்வு மேம்படும் முயற்சியில் இது ஒரு புதிய பயணமாக அமையும். இந்திய மக்களின் சார்பில் நான், அமைதி மற்றும் நட்புணர்வு செய்திகளைத் தாங்கி இங்கு வந்திருக்கிறேன்.இரு தரப்பின் நன்மை குறித்த அனைத்து பிரச்னைகள் குறித்தும் பேசுவோம். கடந்த மாதம் பாகிஸ்தான் வந்து சென்ற உள்துறை அமைச்சர் சிதம்பரம் தெரிவித்த கருத்தான, மும்பை தாக்குதலில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் குறித்த நமது கவலையை மீண்டும் வலியுறுத்துவோம்.இவ்வாறு அமைச்சர் கிருஷ்ணா தெரிவித்தார்.இரு தரப்பிலான உறவுகள் மேம்படுவதற்கு மக்கள் தொடர்பு, சிறைக் கைதிகள் பரிமாற்றம் மற்றும் வர்த்தக உறவுகள் ஆகியவை மேற்கொள்ளப்படும் என்று தெரிகிறது.
No comments:
Post a Comment