Search This Blog

Wednesday, July 21, 2010

இடஒதுக்கீட்டில் ஜெ., இரட்டை வேடம்

இடஒதுக்கீடு பிரச்னையில், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா இரட்டை வேடம் போட்டதாக, தமிழக முதல்வர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்.

அவரது அறிக்கை:மண்டல் கமிஷன் பரிந்துரைகள் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் மீது, 1992ம் ஆண்டு நவம்பர் 16ம் தேதி ஒன்பது நீதிபதிகள் கொண்ட பெஞ்ச், தீர்ப்பு அளித்தது. பெரும்பான்மை நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், "இடஒதுக்கீடுகள் எதுவும் 50 சதவீதத்துக்கு மேல் போகக்கூடாது' என, தெரிவிக்கப்பட்டிருந்தது. இடஒதுக்கீட்டை 69 சதவீதம் என்பதற்கு மாற்றாக, 50 சதவீதம் மட்டுமே செல்லும் என சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பின் விளைவாக, தொழிற்கல்வியில் 69 சதவீதம் இடங்களை ஒதுக்குவது குறித்த போராட்டம், மாணவர்கள் மத்தியில் பெரிதாக எழுந்தது. இடஒதுக்கீடு எத்தனை சதவீதம் என்பதை நிர்ணயிக்கும் உரிமையை, அந்தந்த மாநில அரசுகளுக்கே வழங்கும் வண்ணம், அரசியல் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்பது தான் தி.மு.க.,வின் கோரிக்கையாக இருந்தது.

இடஒதுக்கீடு பிரச்னையில் ஜெயலலிதா அரசு அப்போது இரட்டை வேடம் போடுவதைப் போல ஒரு கருத்து இருந்தது. அதற்கு காரணம், 1993 நவம்பர் 22ல் சுப்ரீம் கோர்ட்டில் அளித்த ஒப்புதல் பிரமாணப் பத்திரத்தில், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை ஏற்று தமிழகத்தில் 1993 - 94ம் ஆண்டுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க ஜெயலலிதா அரசின் சார்பில் சம்மதம் கொடுத்தது தான்.உடனடியாக நான் மேற்கொண்ட முயற்சியின் காரணமாக, சமூக அமைப்புகள் இணைந்து, 69 சதவீத இடஒதுக்கீட்டை வற்புறுத்தி மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் முன் மறியல் போராட்டம் நடத்தின.பார்லிமென்டின் இரு அவைகளையும் கூட்டி, அரசியல் சட்டத் திருத்தத்தைக் கொண்டுவந்து நிறைவேற்ற ஆதரவளிக்கக் கோரி அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும், 1994 ஜூன் 27ம் தேதி கடிதம் எழுதினேன். இதன் பிறகு, ஜூலை 18ம் தேதி ஜெயலலிதாவும், இந்தியாவில் உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் கடிதம் எழுதினார்.

இப்பிரச்னைக்காக, அதே ஆண்டு ஜூன் 17ம் தேதி தி.மு.க., உட்பட அனைத்து எதிர்க்கட்சிகள் மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் முன் மறியல் நடத்தப்போவதாக அறிவித்தபோது, அதே நாளில் பந்த் நடத்த ஜெயலலிதா அழைப்பு விடுத்தார். உடனே மறியலை 20ம் தேதிக்கு ஒத்திவைத்தோம்.மறியலால் வன்முறை ஏற்படும் என ஜெயலலிதா அரசு கூறி, அனுமதி மறுத்ததோடு, ஜூன் 20ம் தேதி காலையில் என்னையும், நல்லகண்ணு, ராமதாஸ், திருநாவுக்கரசர் ஆகியோரையும் கைது செய்து, மாலையில் விடுவித்தது.இடஒதுக்கீட்டுக்கான முயற்சிகளை நான் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது மட்டுமல்ல; அதன் பின், முதல்வராக பொறுப்பேற்றிருந்த நிலையிலும் சமூக நீதி பற்றிய இந்த சாராம்சங்களை வலியுறுத்தி, அதற்குத் துணை நிற்க வேண்டுமென காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கும் மற்றும் பிரதமர்களுக்கும், அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுதியிருக்கிறேன் என்றார்.

No comments: