அம்பாசமுத்திரல் இருந்து அநாதையாக சென்னை வரும் சிறுவன் அம்பானி ஆக முயற்சிப்பதே அம்பாசமுத்திரம் அம்பானி படத்தின் கரு, கதை, களம், காமெடி எல்லாம்!
பிறக்கும்போதே அப்பாவை இழந்து படிக்கும்போது இலவச சேலை கூட்டத்தில் அம்மாவையும் இழந்து அநாதையாகும் கருணாசுக்கு உளரும் உறவும் ஒத்தாசை செய்யாமல் உபத்திரம் தந்ததால் சின்ன வயதிலேயே சென்னைக்கு வருகிறார். வந்த இடத்தில் பேப்பர் போடுவதில் ஆரம்பித்து பால், பலசரக்கு என பலவற்றையும் வீடு வீடாக போட்டு போராடுகிறார். இப்படி போராடி சம்பாதிக்கும் காசை எல்லாம் அம்பானி மாதிரி தொழில் அதிபர் ஆக வேண்டும் என்ற ஆசையில் சின்ன வயதில் சென்னை சிட்டியில் பேப்பர் போடும் வேலைக்கு தன்னை சிபாரிசு செய்த கோட்டா சீனிவாசராவ் அண்ணாச்சியிடம் கொடு்தது வைக்கிறார். அவர் கட்டும் பிரமாண்ட ஷாப்பிங் காம்ப்ளக்ஸில் ஒரு கடை வாங்கி அதில் பெரிய பிஸினஸ் செய்துவிட வேண்டும் என்பது கருணாஸின் ஆசை. இதனூடே கருணாஸ் குடியிருக்கும் பகுதியில் பசிக்கும் நவ்நீத் கவூருக்கு இவர் மீது ஒருதலைக் காதல். வாழ்க்கையில் சாதிக்கும் வரை ஒரு சிலநிமிடங்கள் உட்கார்ந்து ஓய்வு எடுப்பதில்கூட உடன்பாடில்லாத கருணாஸ், நவ்நீத்தின் காதல் வலையில் வீழந்தாரா? அம்பானி ஆனாரா? என்பதை அம்பாசமுத்திரம் அம்பானி படத்தின் மீதிக்கதை சொல்லி இருக்கிறது.
தண்டபாணி அலைஸ் அம்பாசமுத்திரம் அம்பானியாக கருணாஸ் பாத்திரத்திற்கேற்ற பளீச் தேர்வு. காசு பணத்தை கருணாஸ் அலைந்து திரிந்து சேர்ப்பதற்கான காரணமும், அது இல்லாததால் அவருக்கு ஏற்பட்ட வலியும் வடுவும் நிரம்பிய பிளாஷ்பேக்கும் பிரமாதம்! நந்தினியாக நாயகியாக வரும் நவ்நீத் கவுர், விஜயகாந்த் உள்ளிட்டவர்களுடன் ஒருசில படங்களில் தலைகாட்டி பின் காணாமல் போனவர் என்றாலும், கருணாஸுக்கு கனகச்சிதமாக பொருந்துகிறார். படத்தின் கதையோட்டத்தில் நாயகி அநாதையாக்கப்படும் விதமும் நகரங்களில் நடக்கும் கொடூரங்களை தோலுரித்துக் காட்டும் விதமாக படமாகியிருப்பது பேஷ் பேஷ் சொல்ல வைக்கிறது.
கழுத்துக்கு கீழே குழந்தை உடம்புடனும், கழுத்துக்கு மேலே 300 ஹனிமூன்களை பார்த்த முகபாவத்துடனும் கருணாஸூடன் காட்சியளிக்கும் மாஸ்டர் சங்கரின் நடிப்பு நம்பிக்கை துரோக காட்சிகளிலும் சரி... நன்றியுணர்வு காட்சிகளிலும் சரி... நச்! இதுநாள்வரை வில்லனாகவே பார்த்து பழகிய கோட்டா சீனிவாசராவும் அந்த அண்ணாச்சி கேரக்டரும் ரொம்ப பெரிய பலம். லிவிங்ஸ்டன், வி.எம்.சி.ஹனிபா, டி.பி.கஜேந்திரன், ஸ்ரீரஞ்சனி, நிரோஷா, ஆர்.சுந்தர்ராஜன், டெல்லிகணேஷ், மயில்சாமி, சிங்கமுத்து, நெல்லைசிவா உள்ளிட்டவர்களும் அவர்களது நடிப்பும் கூடபலமே! ஒத்தப்பாட்டுக்கு ஆகும் ரகசியாவும்கூட!!
கருணாஸின் இசையில் சோறு வச்சேன்... சோகப்பாடலும், ஒத்தக்கல்லு மூக்குத்தி... குத்துப்பாடலும் போன்றே கருணாஸின் மகன் கென் பாடியிருக்கும் தண்ட தண்டபாணி பாடலும் ஆடவும், பாடவும் வைக்கும் ரகம்! புலித்தேவனின் ஒளிப்பதிவும் ஓ.கே.!
அம்பானி ஆக நினைச்சதாலதான் ஒரு சூப்பர் மார்க்கெட்டிற்காவது முதலாளி ஆக முடிஞ்சது! எனும் க்ளைமாக்ஸ் வசனம் உள்பட படம் முழுக்க பஞ்ச் டயலாக் ஆக இல்லாமல் பாதிப்பை ஏற்படுத்தும் வசனங்களாக ஒலிக்கும் டயலாக்குகளுக்காகவே புதிய இயக்குனர் பி.ராம்நாத்தை பாராட்டலாம் எனும்போது, அவரது கதை, திரைக்கதை, இயக்கத்தை பாராட்டாமல் இருக்க முடியுமா?! சூப்பரப்பு!
No comments:
Post a Comment