உத்தரப் பிரதேசத்தில் முலாயம் சிங் தலைமையிலான சமாஜவாதி கட்சி ஆட்சியைப் பிடித்தது.
மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சி மீது கடுமையான அதிருப்தியில் இருந்த மக்கள் சமாஜவாதி கட்சிக்கு அமோக ஆதரவு அளித்துள்ளார்கள். முலாயம் சிங்தான் கட்சியின் முதல்வர் பதவி வேட்பாளர் என்று கட்சித் தலைவரும் அவருடைய மகனுமான அகிலேஷ் சிங் யாதவ் அறிவித்துவிட்டார்.
மொத்தமுள்ள 403 தொகுதிகளில் முலாயம் சிங் தலைமையிலான சமாஜவாதி கட்சிக்கு 224 தொகுதிகள் கிடைத்துள்ளன.
பகுஜன் சமாஜ் கட்சிக்கு 79 இடங்களும் பாரதிய ஜனதாவுக்கு 47 இடங்களும் காங்கிரஸ் கட்சிக்கு 28 இடங்களும் அஜீத் சிங் தலைமையிலான ராஷ்ட்ரீய லோக தளம் கட்சிக்கு 9 இடங்களும் கிடைத்துள்ளன. இதர கட்சிகளுக்கு 15 இடங்கள் கிடைத்திருக்கின்றன.
பஞ்சாபில் எதிர்பாராத முடிவு: பஞ்சாப் மாநிலத்தில் பிரகாஷ் சிங் பாதல் தலைமையிலான சிரோமணி அகாலிதளம், பாரதிய ஜனதா கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடித்துவிட்டது. காங்கிரஸ் கட்சிக்கு இது பெருத்த அதிர்ச்சியை அளித்துள்ளது. இந்த மாநிலத்தில் தங்கள் கட்சி வெற்றி உறுதி என்றே காங்கிரஸ் தலைவர்கள் பெரிதும் நம்பி வந்தனர். பஞ்சாப் மாநிலத்தின் கடந்த 46 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் இப்படி ஒரே கட்சி அல்லது கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்ததில்லை. பிரகாஷ் சிங் பாதல்தான் மீண்டும் முதல்வராக இருப்பார் என்று அந்தக் கூட்டணி அறிவித்துள்ளது.
பஞ்சாபில் மொத்த இடங்கள் 117. சிரோமணி அகாலிதளம் - பாஜக கூட்டணி 68 இடங்களை வென்றுள்ளது. இதில் அகாலிதளத்துக்கு 56 இடங்களும் பாரதிய ஜனதாவுக்கு 12 இடங்களும் கிடைத்துள்ளன. காங்கிரஸ் கட்சிக்குக் கிடைத்தது 46. 3 இடங்களில் மற்றவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
மணிப்பூரில் 3-வது முறையாக காங்கிரஸ் ஆட்சி: மணிப்பூர் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது. மொத்தமுள்ள 60 தொகுதிகளில் காங்கிரஸ் 42 இடங்களில் வென்றுள்ளது. திரிணமூல் காங்கிரஸ் 7, தேசியவாத காங்கிரஸ் 1, லோக் ஜனசக்தி 1, நாகா மக்கள் முன்னணி 4 ஆகியவை பிற கட்சிகள். இக்கட்சிகளைத் தவிர மற்றவர்கள் பெற்ற இடங்கள் 5.
கோவாவில் ஆட்சியை இழந்தது காங்கிரஸ்: 40 தொகுதிகளைக் கொண்ட கோவா சட்டப் பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா, மகாராஷ்டிரவாதி கோமாந்தக் கூட்டணி 24 இடங்களில் வென்றுள்ளன. இதில் பாரதிய ஜனதாவுக்குக் கிடைத்துள்ள இடங்கள் 21. காங்கிரஸ் கட்சி 9 இடங்களிலும் மற்றவர்கள் 7 இடங்களிலும் வென்றுள்ளனர். கோவா மாநில முதலமைச்சர் திகம்பர் காமத் தன்னுடைய பதவியை ராஜிநாமா செய்துவிட்டார்.
உத்தரகண்டில் இழுபறி: 70 உறுப்பினர்களைக் கொண்ட உத்தரகண்ட் சட்டப் பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. காங்கிரஸ் கட்சி 32 இடங்களில் வென்று முன்னிலை வகிக்கிறது. பாரதிய ஜனதா 31 இடங்களில் வென்றுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி 3 இடங்களில் வென்றுள்ளது. உத்தரகண்ட் கிராந்தி தளம் கட்சிக்கு 1 இடம் கிடைத்திருக்கிறது. 3 சுயேச்சைகளும் வென்றுள்ளனர். கிராந்திதள உறுப்பினரும் 3 சுயேச்சைகளும் தங்களை ஆதரிப்பதாக பாஜக கூறுகிறது. ஆனால் முதலமைச்சர் கந்தூரி பேரவைத் தேர்தலில் தோற்றுவிட்டார்
No comments:
Post a Comment