வைகோ, சீமான் போன்றவர்கள், காகிதப் புலிகள் என்பது, சிங்களவனுக்கு தெரியும். தி.மு.க., - அ.தி.மு.க., இரண்டும், ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான்'' என இளங்கோவன் பேசினார்.
திருச்சி காங்கிரஸ் முப்பெரும் விழா பொதுக்கூட்டத்தில், முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன் பேசியதாவது:எதற்காக இவ்வளவு கூட்டம்? ஏன் இந்த கூட்டம்? நாம் எந்த இலக்கு, எந்த லட்சியத்தை நோக்கிச் செல்கிறோம்? என்ற கேள்வி, அனைத்து தொண்டர்கள் மத்தியிலும் எழுந்துள்ளது. 2016ம் ஆண்டு யார், எங்கே, எப்படி இருக்க வேண்டும்? என்பது, நமது மனதில் எழுந்துள்ள கேள்வியாக உள்ளது.சொல்ல வேண்டிய இடத்தில், மத்திய அமைச்சர்கள் சிதம்பரம், வாசன் உள்ளனர். என் தலைவர் ராஜிவ் கூறியது போல, தி.மு.க., - அ.தி.மு.க., இருவரும், ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான். யாரிடம் வேண்டுமானாலும் கூட்டணி வையுங்கள்; எங்களை அடமானம் வைத்து விடாதீர்கள். சுதந்திரமாக செயல்பட விடுங்கள்.
நாம் சுயமரியாதையோடு, இரு கட்சிகள் செய்த தவறுகளை தட்டிக்கேட்டு, மக்கள் பிரச்னைகளை முன் வைத்துப் போராடினால் தான், நாம் மரியாதையாக இருக்க முடியும்.கூடங்குளம் ஆறு மாதம் செயல்படாததால், பொருளாதார நஷ்டம் ஏற்பட்டது மட்டுமல்லாமல், மாணவர்களின் படிப்பு வீணானது. ஏற்கனவே, சமச்சீர் கல்வி அமல்படுத்துகிறேன் என்ற பெயரில், நான்கு மாதம் படிப்பு வீணானது. மின்வெட்டால் மூன்று மாத காலம் மாணவர் படிப்பு வீணாகியிருக்கிறது.
இதை, சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. இந்தியாவின் எதிர்காலமே இளைஞர்கள் தான். ஓராண்டு படிப்பு வீணானதால், நாட்டின் வளர்ச்சி ஓராண்டு பின் தங்கிவிடும். எனவே, எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்2, எழுதிய மாணவர்களுக்கு, பத்திலிருந்து 20 மதிப்பெண்கள் அதிகமாக வழங்க வேண்டும் என, தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.வைகோ, சீமான் போன்றவர்கள், காகிதப் புலிகள் என்பது, சிங்களவனுக்கு தெரியும். கள்ளத் தோணியில் சென்றாலும், அவர்களை சிங்களவன் அடிக்க மாட்டான். காங்கிரஸ் கட்சி நம்மை அழித்து ஒழித்துவிடும்; எதையும் சாதிக்கிற ஆற்றல் காங்கிரஸ் கட்சிக்கு இருக்கிறது என்பதால் தான் தாக்கினான்.இவ்வாறு இளங்கோவன் பேசினார்.
தமிழகத்தின் முதல் இயக்கம் காங்கிரஸ்: வாசன் விருப்பம்:
திருச்சியில் நடந்த காங் கிரஸ் பொதுக் கூட்டத்தில், கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் வாசன் பேசியதாவது:காங்கிரஸ் ஆட்சி இருக்கும், இருக்காது என்ற எந்த பாகுபாடும் இல்லாமல், குறிப்பாக மாற்றாந்தாய் மனப்பான்மையில்லாத அரசாக, காங்கிரஸ் இயங்குகிறது. அதை மெய்ப்பிக்கும் வகையில், மத்திய தொகுப்பிலிருந்து, தமிழக அரசுக்கு, 21 ஆயிரத்து 338 கோடி ரூபாய் வழங்கியுள்ளது.சுதந்திரம் பெற்று, 65 ஆண்டுகளில், 53 பட்ஜெட்டுகளை காங்கிரஸ் அரசு தாக்கல் செய்துள்ளது. அதன் மூலம் இந்தியாவின் வளர்ச்சிக்கு காங்கிரஸ் தான் காரணம் என்பது கடந்த காலங்களில் நிரூபிக்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில் நாட்டின் வல்லரசாக மாற்றும் சக்தி, காங்கிரஸ் ஆட்சிக்குத் தான் உள்ளது.
இதை பட்டிதொட்டியெல்லாம் எடுத்துச்சென்று, தொண்டர்கள் உணர்த்த வேண்டும். வரும் காலத்தில் தமிழகத்தின் முதல் இயக்கமாக, காமராஜரின் கனவின் படி காங்கிரஸ் வர வேண்டும். மூப்பனாரின் வலிமையான தமிழகம், வளமையான பாரதம் நம் நோக்கமாக இருக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
No comments:
Post a Comment