Search This Blog

Tuesday, March 6, 2012

5 மாநிலங்களில் கட்சிகள் வென்ற இடங்கள் முழு விவரம்

நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களில் உத்தரப் பிரதேசத்தில் முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சி மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தை ஆளும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும், 3வது இடத்தை பாஜகவும் பிடித்துள்ளன. காங்கிரஸ் 4வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.

இந்த மாநிலத்தில் மொத்தமுள்ள 403 இடங்களில் சமாஜ்வாடி கட்சி 226 இடங்களிலும் (ஆட்சியமைக்க குறைந்தது 202 இடங்கள் தேவை), ஆளும் பகுஜன் சமாஜ் கட்சி 80 இடங்களிலும், பாஜக 47 இடங்களிலும், காங்கிரஸ் 38 இடங்களிலும் மட்டுமே வென்றுள்ளன. மற்ற கட்சிகள், சுயேச்சைகள் 12 இடங்களைப் பிடித்துள்ளனர்.

இந்த மாநிலத்தில் கடந்த சட்டமன்றத் தேர்தலோடு ஒப்பிடுகையில் சமாஜ்வாடி கட்சி 129 இடங்களில் கூடுதலாக வெற்றி பெற்றுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி 126 இடங்களை இழந்துள்ளது. காங்கிரஸ் கூடுதலாக 6 இடங்களைப் பிடித்துள்ளது. பாஜக 4 இடங்களை இழந்துள்ளது.

உத்தர்கண்ட்டில்...

உத்தர்கண்ட் மாநிலத்தில் மொத்தமுள்ள 70 இடங்களில் காங்கிரஸ் 32 இடங்களிலும் ஆளும் பாஜக 31 இடங்களிலும் வென்றுள்ளன.

பகுஜன் சமாஜ் கட்சி 3 இடங்களிலும் சுயேச்சைகளும் சிறு கட்சிகளும் 4 இடங்களிலும் வென்றுள்ளன.

ஆட்சியைப் பிடிக்க 35 இடங்கள் தேவை. இதில் காங்கிரஸை மாயாவதி ஆதரிக்கக் கூடும் என்பதால் 35 இடங்களை அந்தக் கட்சி பிடிக்கவுள்ளது. சுயேச்சைகளுடனும் காங்கிரஸ் பேச்சு நடத்தி வருகிறது.

பஞ்சாபில்...

பஞ்சாபில் ஆளும் அகாலிதளம்-பாஜக கூட்டணியே மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ள. இந்த மாநிலத்தில் மொத்தமுள்ள 117 இடங்களில் அகாலிதளம்-பாஜக கூட்டணி 68 இடங்களிலும் காங்கிரஸ் 46 இடங்களிலும் வென்றுள்ளன. மற்ற கட்சிகள் 3 இடங்களில் வென்றுள்ளன.

இந்த மாநிலத்தில் மீண்டும் ஆட்சியமைக்க 58 இடங்களே தேவை. அகாலிதளம்-பாஜக கூட்டணி 68 இடங்களில் வென்று மீண்டும் ஆட்சியமைக்கிறது.

இந்த மாநிலத்தில் கடந்த சட்டமன்றத் தேர்தலோடு ஒப்பிடுகையில் அகாலிதளம்-பாஜக கூட்டணி கடந்த தேர்தலில் பெற்ற இடங்களையே மீண்டும் பெற்றுள்ளது. காங்கிரஸ் 2 இடங்களை கூடுதலாகப் பிடித்துள்ளது.

கோவாவில்...

கோவாவில் காங்கிரஸை தோற்கடித்து பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது.

இந்த மாநிலத்தில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 26 இடங்களில் பாஜக வென்றுள்ளது. ஆளும் காங்கிரஸ் வெறும் 9 இடங்களில் தான் வென்றுள்ளது.

மற்ற கட்சிகள் 5 இடங்களில் வென்றுள்ளன.

கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில், இந்த மாநிலத்தில் பாஜக 10 இடங்களை கூடுதலாகப் பிடித்துள்ளது. காங்கிரஸ் 10 இடங்களை இழந்துள்ளது.

மணிப்பூரில்...

மணிப்பூர் மாநிலத்தில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் ஆளும் காங்கிரஸ் 42 இடங்களில் வென்று 3வது முறையாக தொடர்ந்து ஆட்சியைப் பிடித்துள்ளது.

இதனால் இந்த மாநிலத்தை காங்கிரஸ் தக்க வைத்துள்ளது.

திரிணமூல் காங்கிரஸ் 7 இடங்களிலும், மற்ற கட்சிகளும் சுயேச்சைகளும் 11 இடங்களிலும் வென்றுள்ளன.

பாஜகவுக்கு முட்டை தான் கிடைத்துள்ளது.

கடந்த தேர்தலோடு ஒப்பிடுகையில் காங்கிரசுக்கு 14 இடங்களும், திரிணமூல் காங்கிரசுக்கு 7 இடங்களும் கூடுதலாகக் கிடைத்துள்ளன.

No comments: