Search This Blog

Tuesday, March 6, 2012

உ.பி. தனிப்பெரும்பான்மையில் முலாயம்

உத்தரப் பிரதேசத்தில் முலாயம் சிங் தலைமையிலான சமாஜவாதி கட்சி ஆட்சியைப் பிடித்தது.
மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சி மீது கடுமையான அதிருப்தியில் இருந்த மக்கள் சமாஜவாதி கட்சிக்கு அமோக ஆதரவு அளித்துள்ளார்கள். முலாயம் சிங்தான் கட்சியின் முதல்வர் பதவி வேட்பாளர் என்று கட்சித் தலைவரும் அவருடைய மகனுமான அகிலேஷ் சிங் யாதவ் அறிவித்துவிட்டார்.
மொத்தமுள்ள 403 தொகுதிகளில் முலாயம் சிங் தலைமையிலான சமாஜவாதி கட்சிக்கு 224 தொகுதிகள் கிடைத்துள்ளன.
பகுஜன் சமாஜ் கட்சிக்கு 79 இடங்களும் பாரதிய ஜனதாவுக்கு 47 இடங்களும் காங்கிரஸ் கட்சிக்கு 28 இடங்களும் அஜீத் சிங் தலைமையிலான ராஷ்ட்ரீய லோக தளம் கட்சிக்கு 9 இடங்களும் கிடைத்துள்ளன. இதர கட்சிகளுக்கு 15 இடங்கள் கிடைத்திருக்கின்றன.
பஞ்சாபில் எதிர்பாராத முடிவு: பஞ்சாப் மாநிலத்தில் பிரகாஷ் சிங் பாதல் தலைமையிலான சிரோமணி அகாலிதளம், பாரதிய ஜனதா கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடித்துவிட்டது. காங்கிரஸ் கட்சிக்கு இது பெருத்த அதிர்ச்சியை அளித்துள்ளது. இந்த மாநிலத்தில் தங்கள் கட்சி வெற்றி உறுதி என்றே காங்கிரஸ் தலைவர்கள் பெரிதும் நம்பி வந்தனர். பஞ்சாப் மாநிலத்தின் கடந்த 46 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் இப்படி ஒரே கட்சி அல்லது கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்ததில்லை. பிரகாஷ் சிங் பாதல்தான் மீண்டும் முதல்வராக இருப்பார் என்று அந்தக் கூட்டணி அறிவித்துள்ளது.
பஞ்சாபில் மொத்த இடங்கள் 117. சிரோமணி அகாலிதளம் - பாஜக கூட்டணி 68 இடங்களை வென்றுள்ளது. இதில் அகாலிதளத்துக்கு 56 இடங்களும் பாரதிய ஜனதாவுக்கு 12 இடங்களும் கிடைத்துள்ளன. காங்கிரஸ் கட்சிக்குக் கிடைத்தது 46. 3 இடங்களில் மற்றவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
மணிப்பூரில் 3-வது முறையாக காங்கிரஸ் ஆட்சி: மணிப்பூர் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது. மொத்தமுள்ள 60 தொகுதிகளில் காங்கிரஸ் 42 இடங்களில் வென்றுள்ளது. திரிணமூல் காங்கிரஸ் 7, தேசியவாத காங்கிரஸ் 1, லோக் ஜனசக்தி 1, நாகா மக்கள் முன்னணி 4 ஆகியவை பிற கட்சிகள். இக்கட்சிகளைத் தவிர மற்றவர்கள் பெற்ற இடங்கள் 5.
கோவாவில் ஆட்சியை இழந்தது காங்கிரஸ்: 40 தொகுதிகளைக் கொண்ட கோவா சட்டப் பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா, மகாராஷ்டிரவாதி கோமாந்தக் கூட்டணி 24 இடங்களில் வென்றுள்ளன. இதில் பாரதிய ஜனதாவுக்குக் கிடைத்துள்ள இடங்கள் 21. காங்கிரஸ் கட்சி 9 இடங்களிலும் மற்றவர்கள் 7 இடங்களிலும் வென்றுள்ளனர். கோவா மாநில முதலமைச்சர் திகம்பர் காமத் தன்னுடைய பதவியை ராஜிநாமா செய்துவிட்டார்.
உத்தரகண்டில் இழுபறி: 70 உறுப்பினர்களைக் கொண்ட உத்தரகண்ட் சட்டப் பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. காங்கிரஸ் கட்சி 32 இடங்களில் வென்று முன்னிலை வகிக்கிறது. பாரதிய ஜனதா 31 இடங்களில் வென்றுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி 3 இடங்களில் வென்றுள்ளது. உத்தரகண்ட் கிராந்தி தளம் கட்சிக்கு 1 இடம் கிடைத்திருக்கிறது. 3 சுயேச்சைகளும் வென்றுள்ளனர். கிராந்திதள உறுப்பினரும் 3 சுயேச்சைகளும் தங்களை ஆதரிப்பதாக பாஜக கூறுகிறது. ஆனால் முதலமைச்சர் கந்தூரி பேரவைத் தேர்தலில் தோற்றுவிட்டார்

பஞ்சாபில் பாஜகவுக்கு பெரும் சரிவு: சொந்த பலத்தால் தப்பிய அகாலிதளம்!

பஞ்சாப் மாநிலத்தில் அகாலிதளம் கட்சி அதிக இடங்களில் வென்றுள்ள நிலையில், அதன் கூட்டணிக் கட்சியான பாஜக கடந்த தேர்தலைவிட அதிகமான இடங்களில் தோற்றுள்ளது.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் இந்தக் கூட்டணியில் அகாலிதளம் 48 இடங்களிலும் பாஜக 19 இடங்களிலும் வென்றிருந்தன. ஆனால், இந்த முறை பாஜக வெறும் 12 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது.

அதிர்ஷ்டவசமாக அகாலிதளம் கடந்த தேர்தலை விட 8 இடங்களை கூடுதலாக வென்றதால் ஆட்சியைத் தக்க வைக்க முடிந்துள்ளது. அகாலிதளம் இம்முறை 56 இடங்களைப் பிடித்து, பாஜகவால் தனது கூட்டணிக்கு ஏற்பட்ட பெரும் சரிவை ஈடுகட்டிவிட்டது.

இந்த மாநிலத்தில் மொத்தமுள்ள 117 இடங்களில் ஆட்சியைப் பிடிக்க 59 இடங்கள் தேவை என்ற நிலையில் இந்தக் கூட்டணி 68 இடங்களைப் பிடித்துள்ளது.

பாஜகவைப் போல அகாலிதளமும் சரிந்திருந்தால், நிலைமை வேறு மாதிரி ஆகியிருக்கும்.

இந்த மாநிலத்தில் கடந்த தேர்தலில் வென்றதைவிட இம்முறை 2 இடங்களைக் கூடுதலாகப் பெற்று 46 இடங்களைப் பிடித்துள்ளது காங்கிரஸ்.

ஓட்டு சதவீதம்:

கடந்த தேர்தலில் 37.09 சதவீத வாக்குகள் வாங்கிய அகாலிதளம் இந்தமுறை 34.75 சதவீத வாக்குளைப் பெற்றுள்ளது. கடந்த தேர்தலில் 8.28 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்த அதன் கூட்டணிக் கட்சியான பாஜக இம்முறை 7.13 சதவீத வாக்குகளையே வென்றுள்ளது.

தேர்தலில் தோற்றாலும் காங்கிரசின் வாக்கு சதவீதம் 40.90 சதவீதத்திலிருந்து கொஞ்சமே கொஞ்சம் அதிகரித்து 40.11 சதவீதமாக உயர்ந்துள்ளது.

5 மாநிலங்களில் கட்சிகள் வென்ற இடங்கள் முழு விவரம்

நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களில் உத்தரப் பிரதேசத்தில் முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சி மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தை ஆளும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும், 3வது இடத்தை பாஜகவும் பிடித்துள்ளன. காங்கிரஸ் 4வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.

இந்த மாநிலத்தில் மொத்தமுள்ள 403 இடங்களில் சமாஜ்வாடி கட்சி 226 இடங்களிலும் (ஆட்சியமைக்க குறைந்தது 202 இடங்கள் தேவை), ஆளும் பகுஜன் சமாஜ் கட்சி 80 இடங்களிலும், பாஜக 47 இடங்களிலும், காங்கிரஸ் 38 இடங்களிலும் மட்டுமே வென்றுள்ளன. மற்ற கட்சிகள், சுயேச்சைகள் 12 இடங்களைப் பிடித்துள்ளனர்.

இந்த மாநிலத்தில் கடந்த சட்டமன்றத் தேர்தலோடு ஒப்பிடுகையில் சமாஜ்வாடி கட்சி 129 இடங்களில் கூடுதலாக வெற்றி பெற்றுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி 126 இடங்களை இழந்துள்ளது. காங்கிரஸ் கூடுதலாக 6 இடங்களைப் பிடித்துள்ளது. பாஜக 4 இடங்களை இழந்துள்ளது.

உத்தர்கண்ட்டில்...

உத்தர்கண்ட் மாநிலத்தில் மொத்தமுள்ள 70 இடங்களில் காங்கிரஸ் 32 இடங்களிலும் ஆளும் பாஜக 31 இடங்களிலும் வென்றுள்ளன.

பகுஜன் சமாஜ் கட்சி 3 இடங்களிலும் சுயேச்சைகளும் சிறு கட்சிகளும் 4 இடங்களிலும் வென்றுள்ளன.

ஆட்சியைப் பிடிக்க 35 இடங்கள் தேவை. இதில் காங்கிரஸை மாயாவதி ஆதரிக்கக் கூடும் என்பதால் 35 இடங்களை அந்தக் கட்சி பிடிக்கவுள்ளது. சுயேச்சைகளுடனும் காங்கிரஸ் பேச்சு நடத்தி வருகிறது.

பஞ்சாபில்...

பஞ்சாபில் ஆளும் அகாலிதளம்-பாஜக கூட்டணியே மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ள. இந்த மாநிலத்தில் மொத்தமுள்ள 117 இடங்களில் அகாலிதளம்-பாஜக கூட்டணி 68 இடங்களிலும் காங்கிரஸ் 46 இடங்களிலும் வென்றுள்ளன. மற்ற கட்சிகள் 3 இடங்களில் வென்றுள்ளன.

இந்த மாநிலத்தில் மீண்டும் ஆட்சியமைக்க 58 இடங்களே தேவை. அகாலிதளம்-பாஜக கூட்டணி 68 இடங்களில் வென்று மீண்டும் ஆட்சியமைக்கிறது.

இந்த மாநிலத்தில் கடந்த சட்டமன்றத் தேர்தலோடு ஒப்பிடுகையில் அகாலிதளம்-பாஜக கூட்டணி கடந்த தேர்தலில் பெற்ற இடங்களையே மீண்டும் பெற்றுள்ளது. காங்கிரஸ் 2 இடங்களை கூடுதலாகப் பிடித்துள்ளது.

கோவாவில்...

கோவாவில் காங்கிரஸை தோற்கடித்து பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது.

இந்த மாநிலத்தில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 26 இடங்களில் பாஜக வென்றுள்ளது. ஆளும் காங்கிரஸ் வெறும் 9 இடங்களில் தான் வென்றுள்ளது.

மற்ற கட்சிகள் 5 இடங்களில் வென்றுள்ளன.

கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில், இந்த மாநிலத்தில் பாஜக 10 இடங்களை கூடுதலாகப் பிடித்துள்ளது. காங்கிரஸ் 10 இடங்களை இழந்துள்ளது.

மணிப்பூரில்...

மணிப்பூர் மாநிலத்தில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் ஆளும் காங்கிரஸ் 42 இடங்களில் வென்று 3வது முறையாக தொடர்ந்து ஆட்சியைப் பிடித்துள்ளது.

இதனால் இந்த மாநிலத்தை காங்கிரஸ் தக்க வைத்துள்ளது.

திரிணமூல் காங்கிரஸ் 7 இடங்களிலும், மற்ற கட்சிகளும் சுயேச்சைகளும் 11 இடங்களிலும் வென்றுள்ளன.

பாஜகவுக்கு முட்டை தான் கிடைத்துள்ளது.

கடந்த தேர்தலோடு ஒப்பிடுகையில் காங்கிரசுக்கு 14 இடங்களும், திரிணமூல் காங்கிரசுக்கு 7 இடங்களும் கூடுதலாகக் கிடைத்துள்ளன.